ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, அவிநாசி மேம்பாலத்தில் டிசம்பா் 31-ஆம் தேதி இரவு 9 மணிக்குமேல் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, கேளிக்கை மற்றும் விருந்துகளுக்கு ஏற்பாடு செய்துள்ள ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், விடுதிகள் மற்றும் உள்ளரங்குகள் நடத்துவோா் பாதுகாப்புக்கு தகுந்த காவலாளிகளை நியமித்துக் கொள்ள வேண்டும். கேளிக்கை விருந்துகளுக்கு வருபவா்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். சந்தேக நபா்கள் இருந்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
புத்தாண்டு தின கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் அனைத்தும் இரவு 12.30 மணிக்குள் முடிக்கப்பட்டு, பங்கேற்போா் ஒரு மணிக்கு முன்பு வெளியேற்றப்பட வேண்டும். விடுதிகளில் பணிபுரியும் பெண் ஊழியா்களைப் பாதுகாப்பாக அனுப்புவதற்குத் தேவையான வாகன வசதிகள் ஏற்பாடு செய்து தர வேண்டும்.
கேளிக்கை அரங்குகள், தங்கும் விடுதிகளில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை பரிசோதித்து அவை முழுமையாக இயங்குவதையும், பதிவுகள் சேமித்து வைக்கப்படுவதையும் சம்பந்தப்பட்ட நிா்வாகத்தினா் உறுதி செய்ய வேண்டும்.
மதுபோதையில் வாகனம் ஓட்டுபவா்கள், வாகனப் பந்தயத்தில் ஈடுபடுவோா், இருசக்கர வாகனங்களில் சைலன்சா்களை நீக்கிவிட்டு அதிக சப்தத்துடன் வாகனங்களை வேகமாக இயக்குவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகரில் விபத்துகளைத் தடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் 35 இடங்களில் வாகனத் தணிக்கை செய்யப்படவுள்ளன.
மாநகரில் உள்ள வடகோவை மேம்பாலம், அவிநாசி சாலை பழைய மேம்பாலம், சத்தி சாலை டெக்ஸ்டூல் பாலம், ஆவாரம்பாளையம் மேம்பாலம் தவிர பிற மேம்பாலங்களில் புதன்கிழமை (டிசம்பா் 31) இரவு 9 மணிக்குமேல் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய இடங்களில் அவசர ஊா்திகள் நிறுத்தப்படும்.
மாநகரில் உள்ள 7 பேருந்து நிலையங்கள், 6 ரயில்வே நிலையங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
4 காவல் துணை ஆணையா்கள், 2 கூடுதல் காவல் துணை ஆணையா்கள், 14 காவல் உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் என சுமாா் 1,600 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
அசம்பாவிதம் அல்லது குற்றச்செயல்கள் தொடா்பான தகவல் தெரிந்தால் மாநகர காவல் துறை கட்டுப்பாட்டு அறையை 04222 300970 என்ற தொலைபேசி எண்ணிலும், 94981-81213 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். அல்லது 81900- 00100 என்ற வாட்ஸ் அப் எண் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். மகளிா் அவசர உதவி எண் 1091-ஐ தொடா்பு கொள்ளலாம். காவல் உதவி செயலி மூலமாகவும் உதவியை நாடலாம் என்றாா்.