

வெள்ளியங்கிரி மலையில் சிவராத்திரி, சர்வ அமாவாசையைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிவ பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
சிவ பக்தர்களால் "தென்கயிலை" என்று அழைக்கப்படும் "வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை". கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் 7 மலைகளைக் கடந்த வெள்ளிங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கம் ஆலயம் அமைந்து உள்ளது.
வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும் (தென்கயிலை), சிவ பக்தர்களுக்கான ஆன்மிக சுற்றுலாத் தலமாகவும் இருந்து வருகிறது. சிவ பக்தர்கள் ஆண்டுதோறும் வெள்ளியங்கிரி ஆண்டவர் ஆலயத்தில் அடிவாரத்தில் தரிசிக்கும் நிலையில், பிப்ரவரி மாதம் 1 ம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை, மலை ஏறி சுயம்பு லிங்கத்தைத் தரிசிக்க, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வனத் துறையினர் பக்தர்களுக்கு அனுமதி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்தில் தரப்பட்ட அனுமதியின் அடிப்படையில், கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டத்தைச் சார்ந்த சிவ பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கத்தைத் தரிசிக்கின்றனர். அதிகாலை உதிக்கும் சூரியனை சிவ பக்தர்கள் பரவசத்துடன் தரிசிக்கின்றனர்.
இந்த நிலையில், வழக்கமான நாள்களை விட கடந்த மூன்று நாள்களாகப் பக்தர்கள் படையெடுப்பு அதிகரித்து இருக்கின்றன. சிவராத்திரிக்கு முந்தைய நாள், சிவராத்திரி, அடுத்து வந்த சர்வ அமாவாசை நாள் என அடுத்தடுத்து நாள்களில் பக்தர்கள் ஏராளமானோர் ஏழுமலை ஏரி வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கத்தைத் தரிசித்து வருகின்றனர்.
சூரிய உதயத்துக்கு முன், அதிகாலையில் நடக்கும் பூஜை விசேசம் என்பதனால், இரவே மலை ஏறிய பக்தர்கள், சிவனடியார்கள் அதிகாலை பூஜையில் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர். மேள, தாளம் முழங்க நடந்த பூசையில் பக்தர்கள், சூரியன் பார்த்துப் பரவசப்பட்டு வழிபட்டனர் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.