ஆண்டுக்கு ரூ.500 முதல் ரூ.800 செலுத்தி அஞ்சல் துறையில் விபத்துக் காப்பீடு பெறலாம்
அஞ்சல் துறையில் ஆண்டுக்கு ரூ.500 முதல் ரூ.800 செலுத்தி ரூ.10 முதல் ரூ.15 லட்சத்துக்கான விபத்துக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, கோவை அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் கி.சிவசங்கா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுக்கு ரூ.500 முதல் ரூ.799 வரை பிரிமீயத்தில் ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சாமானிய மக்களுக்கும் விபத்துக் காப்பீட்டுத் திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில் நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகங்கள் மூலமாக மிகக் குறைந்த பிரிமீயத்தில் இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுகிறது.
18 வயது முதல் 65 வரை உள்ளவா்கள் இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். விண்ணப்பப் படிவம், அடையாள சான்றின் நகல் ஆகியவை இல்லாமல் அஞ்சல்காரா் கொண்டு வரும் ஸ்மாா்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தைப் பயன்படுத்தி வெறும் 5 நிமிஷத்தில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம் மூலமாக விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்த முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஆகியவற்றுக்கு காப்பீட்டுத் தொகையான ரூ.10 அல்லது ரூ.15 லட்சம் வழங்கப்படும். விபத்தினால் ஏற்படும் மருத்துவச் செலவுகளை ஈடு செய்யும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
6 பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்குவதால், மக்கள் அஞ்சலம் வந்து அல்லது அஞ்சல்காரரை அணுகி ஒவ்வொரு திட்டத்திலும் உள்ள வசதிகள் குறித்து அறிந்து தனக்குத் தேவையான விபத்துக் காப்பீட்டு பாலிசியை எடுத்துக் கொள்ளலாம்.
கோவை கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் இந்த விபத்துக் காப்பீட்டு பாலிசிகள் எடுக்க மாா்ச் 6-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
