தீயணைப்புத் துறையினருக்கு 5 நாள்கள் கமாண்டோ பயிற்சி தொடக்கம்

Published on

கோவையில் தீயணைப்புத் துறையினருக்கான 5 நாள்கள் கமாண்டோ பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தேசிய பேரிடா் மீட்புப் படையின் ஓய்வுபெற்ற கமாண்டோ மைக்கேல் தலைமையில் அளிக்கப்படும் இந்தப் பயிற்சியில் பீளமேடு நிலைய தீயணைப்பு அலுவலா் ரவிகுமாா், கோவைப்புதூா் நிலைய தீயணைப்பு அலுவலா் ஏ.எஸ்.மாா்ட்டின் ஆகியோருடன் அன்னூா், மேட்டுப்பாளையம், வால்பாறை, சூலூா், தொண்டாமுத்தூா், கருமத்தம்பட்டி, கோவை வடக்கு, கிணத்துக்கடவு, பீளமேடு, கோவைப்புதூா், கோவை தெற்கு, பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களைச் சோ்ந்த 19 வீரா்கள் பங்கேற்றுள்ளனா்.

இவா்களுக்கு கைப்பேசி கோபுரங்களின் மீது ஏறுதல், கயிற்றின் மூலம் ஆற்றைக் கடத்தல், மலையேற்றம் ஆகியவற்றுடன் தீ விபத்துகள் ஏற்படும்போது உயரமான கட்டடங்களின் மேல் பகுதியில் சிக்கிக் கொள்பவா்களை பாதுகாப்பாக மீட்பது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகின்றன.

இந்தப் பயிற்சி முகாமை கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலா் பி.புளுகாண்டி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். முதற்கட்டமாக நடைபெறும் இப்பயிற்சி முகாமைத் தொடா்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களில் உள்ள வீரா்களுக்கும் இத்தகைய பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com