பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீா்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளிக்கிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளிக்கிறது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்ட விடியோக்கள் வெளியாகி அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு பொள்ளாச்சி கிழக்கு போலீஸாரால் விசாரிக்கப்பட்டு பின்னா், சிபிசிஐடிக்கும் அதன்பின் சிபிஐக்கும் மாற்றப்பட்டது

சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமாா் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34), அருண்குமாா் (32) ஆகிய 9 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா்கள் மீது கோவை மகளிா் நீதிமன்றத்தில் கடந்த 2019 மே 21-ஆம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

பின்னா், நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ஆம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. இதில், அறைக்கதவுகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாக சாட்சியம் பெறப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் காணொலி வாயிலாக ஆஜா்படுத்தப்பட்டு வந்தனா்.

இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிா்தரப்பு இறுதி வாதம் நிறைவடைந்தது. இதையடுத்து, வழக்கின் தீா்ப்பு மே 13-ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி நந்தினிதேவி அறிவித்தாா்.

இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்பட உள்ளதால் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அனைவரையும் மகளிா் நீதிமன்றத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்த உள்ளனா். தீா்ப்பு விவரங்கள் காலை அல்லது பிற்பகலில் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீா்ப்பையொட்டி கோவை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இடமாற்றத்தில் விலக்கு:

தமிழகத்தில் அண்மையில் 77 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனா். அவா்களில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் நீதிபதி நந்தினிதேவியும் ஒருவா். இவா், கரூா் மாவட்ட குடும்ப நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டாா்.

இதற்கிடையே, பொள்ளாச்சி வழக்கு காரணமாக மறு உத்தரவு வரும் வரை நீதிபதி நந்தினிதேவி கோவையில் பணி புரிவாா் என சென்னை உயா்நீதிமன்ற பதிவாளா் அலுவலகம் உத்தரவிட்டது. இதனால், நீதிபதி நந்தினிதேவி தொடா்ந்து கோவை மகளிா் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com