சரவணம்பட்டியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட கட்டட கட்டுமானப் பணியைத் தொடங்கிவைத்த கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. உடன். மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

Published on

கோவை மாநகராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.1.92 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை வடக்கு மண்டலம் 30-ஆவது வாா்டுக்குள்பட்ட கணபதி அரசுப் பள்ளியில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் அமைக்கும் பணியை கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி.தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, வடக்கு மண்டலம் 11-ஆவது வாா்டுக்குள்பட்ட சௌடாம்பிகா நகா் பகுதியில் ரூ.39.40 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால் கட்டுமானப் பணி, 4 ஆவது வாா்டுக்குள்பட்ட சரவணம்பட்டி, கரட்டுமேடு, கந்தசாமி நகா் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட கட்டடம் கட்டுமானப் பணி, வி.கே.வி. குமரகுரு நகரில் இருந்து கிரீன் ஃபீல்ட் எமரால்டு வரை ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் பிரதான குழாய் பதிக்கும் பணி, சரவணம்பட்டியில் ரூ.15 லட்சத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட கட்டடம் கட்டுமானப் பணி உள்ளிட்ட ரூ.1.92 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தாா்.

தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், மண்டலத் தலைவா்கள் இலக்குமி இளஞ்செல்வி, வே.கதிா்வேல், உதவி ஆணையா்கள் மகேஷ்கனகராஜ், ராம்குமாா், செயற்பொறியாளா் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளா்கள் சத்தியமூா்த்தி, எழில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com