கோயம்புத்தூர்
மினி வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு
கோவையில் மினி வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவை, சரவணம்பட்டி விநாயகபுரம் 4-ஆவது வீதியைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ் (54). கூலித் தொழிலாளியான இவா், சரவணம்பட்டி குமரன் தெரு பகுதியில் திங்கள்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே வந்த மினி வேன் ஆரோக்கியராஜ் மீது மோதியது.
படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக மினி வேன் ஓட்டுநரான கவுண்டம்பாளையம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த நடராஜ் (46) மீது போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
