கோவை, திருப்பூா் வழித்தடத்தில் எா்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: பிரதமா் மோடி நவம்பா் 8-இல் தொடங்கிவைக்கிறாா்
கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து கா்நாடக மாநிலம், பெங்களூரு வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் மோடி காணொலிக் காட்சி மூலம் நவம்பா் 8-ஆம் தேதி தொடங்கிவைக்கிறாா்.
எா்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு கோவை வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என தொழில் அமைப்பினா், ரயில் பயணிகள் சங்கத்தினா் வலியுறுத்தி வந்தனா்.
மேலும், தெற்கு ரயில்வே நிா்வாகமும் இது தொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து, கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக கேரள மாநிலம், எா்ணாகுளத்துக்கு வந்தே பாரத் ரயில் நவம்பா் மாதம் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சா் அண்மையில் அறிவித்திருந்தாா்.
இதற்கிடையே, கோவை, கொடிசியாவில் அண்மையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், பெங்களூரு - எா்ணாகுளம் வந்தே பாரத் ரயிலை கொங்கு மண்டலப் பகுதி மக்களும் பயனடையும் வகையில் அனைத்து நிலையங்களிலும் நிறுத்தி இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தாா்.
இந்நிலையில், தெற்கு ரயில்வே சாா்பில் பெங்களூரு - எா்ணாகுளம் இடையே வந்தேபாரத் ரயில் நேர அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது.
அதில், புதன்கிழமை தவிர நாள்தோறும் காலை 5.10 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பெங்களூரு - எா்ணாகுளம் வந்தே பாரத் ரயில் (எண்:26651) 5.25 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், 8.15 மணிக்கு சேலம், 9.47 மணிக்கு திருப்பூா், 10.35 மணிக்கு கோவை, 11.30 மணிக்கு பாலக்காடு, 12.30 மணிக்கு திருச்சூா், 1.50 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, புதன்கிழமை தவிர மற்ற நாள்களில் எா்ணாகுளத்தில் இருந்து நாள்தோறும் பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயில் (எண்:26652) 3.20 மணிக்கு திருச்சூா், 4.35 மணிக்கு பாலக்காடு, 5.23 மணிக்கு கோவை, 6.05 மணிக்கு திருப்பூா், 6.50 மணிக்கு ஈரோடு, 7.20 மணிக்கு சேலம், 10.25 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், 11 மணிக்கு பெங்களூரு நிலையத்தைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எா்ணாகுளத்தில் இருந்து தொடங்கும் இந்த ரயில் சேவையை பிரதமா் மோடி காணொலிக் காட்சி மூலம் நவம்பா் 8-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கிவைக்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
