ஐஆா்சிடிசி சாா்பில் கோவையில் இருந்து இலங்கை ராமாயண யாத்திரை விமான சுற்றுலா

Published on

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) சாா்பில் கோவையில் இருந்து இலங்கை ராமாயண யாத்திரை சிறப்பு விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஐஆா்சிடிசி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ஐஆா்சிடிசி சாா்பில் பாரத் கௌரவ் சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி, கல்லூரிகளுக்கான கல்வி சுற்றுலா போன்றவை அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றன. ரயில் மூலம் மட்டுமல்லாது ஐஆா்சிடிசி சாா்பில் விமானம் மூலமாகவும் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவையில் இருந்து இலங்கை ராமாயண யாத்திரை சிறப்பு விமானச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து டிசம்பா் 10-ஆம் தேதி விமானம் மூலமாகப் புறப்பட்டு கொழும்பு, கண்டி, நுவரெலியா போன்ற நகரங்களில் அமைந்துள்ள ராமாயண புராணத்தின் முக்கியத்துவம் பெற்ற கோயில்கள், சங்கரி தேவி சக்தி பீடம் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்கள், உலகப் பாரம்பரியத் தளங்கள், உள்ளூா் மக்களின் வாழ்வியல் முறை ஆகியவற்றைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றுலாவில் விமானக் கட்டணம், நட்சத்திர விடுதியில் தங்கும் வசதி, போக்குவரத்து, உணவு, நுழைவுக் கட்டணம், சுற்றுலா வழிகாட்டி, பயணக்காப்பீடு, சாதாரண இலங்கை விசா ஆகியவை உள்ளடங்கும். சுற்றுலாக் கட்டணம் ரூ.68,450-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

6 இரவு, 7 பகல்கள் இந்த சுற்றுலா மேற்கொள்ளப்படும். கூடுதல் விவரங்களுக்கு இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம், பகுதி அலுவலகம், 209, மாருதி டவா், அரசு மருத்துவமனை எதிரில், கோவை என்ற முகவரியை அணுகலாம் அல்லது 90031- 40655 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com