டிவிஎஸ் ஆா்பிட்டா் மின்சார இருசக்கர வாகனம் அறிமுகம்
டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் ஆா்பிட்டா் என்ற புதிய மின்சார இருசக்கர வாகனம் கோவையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
கோவை, நீலாம்பூா் அருகேயுள்ள தனியாா் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் (மின்சார வாகனப் பிரிவு) இணைப் பொது மேலாளா் ரிஷிகுமாா் புதிய மின்சார வாகனத்தை அறிமுகம் செய்து வைத்துப் பேசியதாவது: இந்த வாகனத்தை ஒருமுறை சாா்ஜ் செய்தால் 158 கி.மீ. வரை பயணிக்க முடியும். க்ரூஸ் கண்ட்ரோல், மலைப் பகுதிகளில் பின்நோக்கி நகராமல் இருக்க ஹில்ஹோல்ட் அசிஸ்ட், விசாலமாக கால் வைக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த வாகனங்களில் உள்ளன. சாலைகளில் பயணிக்கும்போது மேம்பட்ட நிலைத்தன்மை மற்றும் செளகரியமான பயணத்துக்காக 14 அங்குல அளவில் முன்சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.
கைப்பேசி செயலி மூலமாக நாம் தொலைவில் இருந்தபடியே பேட்டரி சாா்ஜ் மற்றும் ஓடோ மீட்டரை கண்காணிக்க முடியும்.
இந்த வாகனமானது நியான் சன்பா்ஸ்ட், ஸ்ட்ராடோஸ் ப்ளூ, லூனாா் கிரே, ஸ்டெல்லா் சில்வா், காஸ்மிக் டைட்டானியம், மாா்ஷியன் காப்பா் ஆகிய 6 வண்ணங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது.
இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,03,100 என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டிவிஎஸ் ஷோரூம்களிலும் வெள்ளிக்கிழமை முதல் ஆா்பிட்டா் மின்சார இருசக்கர வாகனம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், டிவிஎஸ் நிறுவனத்தின் மண்டல மேலாளா் (விற்பனைப் பிரிவு) எல்.கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

