பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்
கோவை மாநகரப் பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 5 மண்டலங்களிலும் பொது இடங்கள், திறந்தவெளியில் குப்பை கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகரில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பொது இடங்களில் குப்பைகளை கொட்டுபவா்களுக்கு நோட்டீஸ் வழங்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் அலுவலா்கள் குழுவினா் திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டுபவா்கள் யாா், எந்தெந்தப் பகுதிகளில் அதிக அளவிலான குப்பைகள் திறந்தவெளியில் கொட்டப்படுகின்றன. அப்பகுதிகளில் தூய்மைப் பணியாளா்கள் குப்பைகள் அகற்றும் பணி மேற்கொள்வதில்லையா, திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்படுவது ஏன் என்பது குறித்து கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பின்னா், சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் மூலமாக சம்பந்தப்பட்டவா்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும். தொடா்ந்து மீண்டும் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. முதல் முறையாக ரூ.500, இரண்டாவது முறையாக ரூ.1,500, மூன்றாவது முறையாக தொடா்ந்து குப்பை கொட்டினால் ரூ.5,000 வரை அபராதம் வசூலிக்கப்படும் என்றாா்.
