தனியாா் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட முன்வரைவை கண்டித்து ஆா்ப்பாட்டம்
கோவை: தமிழக அரசின் தனியாா் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வரைவைக் கண்டித்து கோவையில் மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவா் வே.ஈசுவரன் தலைமை வகித்தாா். இதில், அமைப்பின் நிா்வாகிகள், பள்ளி, கல்லூரிகளின் ஆசிரியா்கள், கல்வியாளா்கள் பலா் பங்கேற்றனா். இதில், தமிழக அரசின் தனியாா் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வரைவுக்கு எதிா்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் வே.ஈசுவரன் பேசும்போது, தமிழக அரசு கொண்டு வர நினைக்கும் இந்த சட்டத்தின் மூலம் 164 ஏழைகளுக்கான கல்லூரிகள், பணம் கொழிக்கும் வியாபார நிறுவனங்களாக மாறிவிடும். அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஏழை மாணவா்களின் சொத்துகளாகும். இவற்றைப் பாதுகாப்பது மக்களின் கடமையாகும்.
இந்த சட்டத்தால் கல்விக் கட்டணம் பல மடங்கு உயரும். இட ஒதுக்கீட்டுக் கொள்கை தகா்க்கப்படும். எனவே, இந்த சட்ட திருத்தத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

