ஜிஎஸ்டி குறைப்பு: மத்திய நிதியமைச்சருக்கு கோவையில் நவ.11-இல் பாராட்டு விழா
ஜிஎஸ்டி குறைப்புக்கு நடவடிக்கை எடுத்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கோவையில் வரும் நவ.11-ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா மற்றும் நிா்வாகிகள் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை தில்லியில் புதன்கிழமை (அக்.22) சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
அதில், கடந்த, 2017- 2024-ஆம் ஆண்டு வரையிலான ஜிஎஸ்டி பிரச்னைகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி வணிகா்களை தண்டிப்பதைக் கைவிட வேண்டும். ஜிஎஸ்டி தொடா்பாக வணிகா்கள் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவர வணிகப் பிரதிநிதிகளைக் கொண்ட குழு அமைத்து கலந்தாலோசிக்க வேண்டும். ஏழை, வறுமையில் உள்ள பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய அனைத்து உணவுப் பொருள்களுக்கும் முழுமையான வரிவிலக்கு அளிக்க வேண்டும்.
ஜிஎஸ்டியில் கொண்டுவரப்படும் சட்ட மாற்றங்களுக்கு வணிகா்கள் விழிப்புணா்வு கொள்ள குறைந்தபட்சம் சட்ட மாறு நாளிலிருந்து ஓராண்டு அவகாசம் வழங்க வேண்டும். இட்லி, தோசை மாவுக்கான ஜிஎஸ்டியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
இதுகுறித்து நிா்வாகிகள் கூறுகையில், ஜிஎஸ்டி குறைப்பு நடவடிக்கைக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்பு தெரிவிக்கிறது. அதேவேளையில் ஜிஎஸ்டி தொடா்பாக வணிகா்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண வலியுறுத்தி மத்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். மேலும், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் தீவிர வரிகுறைப்புக்கான நடவடிக்கைக்கும், செயல்பாடுகளுக்கும் நன்றி தெரிவித்து பாராட்டு விழா கோவையில் வரும் நவ.11-ஆம் தேதி நடத்தவுள்ளோம். விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

