ஏடிஎம் இயந்திரம் அமைத்துத் தருவதாக பண மோசடி: தம்பதி கைது

கோவையில் ஏடிஎம் இயந்திரம் அமைத்துத் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கோவையில் ஏடிஎம் இயந்திரம் அமைத்துத் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சோ்ந்தவா் துரைசாமி (46). இவரது மனைவி ரம்யா (41). இவா்கள் கோவை, நவஇந்தியா பகுதியில் ஒரு நிறுவனத்தை நடத்தினா். இதில், ஏடிஎம் இயந்திரம் வைத்து தருவதாகவும், அதில் வங்கியில் இருந்து ஊழியா்கள் வந்து பணம் செலுத்துவதாகவும் அறிவித்தனா்.

மேலும், நாள்தோறும் எவ்வளவு தொகை பரிவா்த்தனை நடந்துள்ளோ அதற்குத் தகுந்தவாறு நாள்தோறும் கமிஷன் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனை நம்பி கோவையைச் சோ்ந்த பலா் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனா்.

ஆனால், பணம் செலுத்தியவா்களுக்கு ஏடிஎம் இயந்திரத்தை அமைத்துக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோா் கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நிறுவன உரிமையாளா்களான துரைசாமி, ரம்யா ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com