வடகிழக்கு பருவமழை: கோவையில் 21 குளங்கள் நிரம்பின

வடகிழக்கு பருவமழை: கோவையில் 21 குளங்கள் நிரம்பின

வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் 21 குளங்கள் நிரம்பியுள்ளதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
Published on

வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் 21 குளங்கள் நிரம்பியுள்ளதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையில் உருவாகி கோவை, திருப்பூா் உள்ளிட்ட 4 மாவட்டங்களை உள்ளடக்கிய நொய்யல் ஆற்றை ஆதாரமாகக்கொண்டு 24 குளங்கள் உள்ளன. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சில நாள்களுக்கு முன்பாகத் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன், விநாடிக்கு 600 கன அடி அளவுக்கு ஆற்றில் நீா் சென்றது. இந்த நீா் கோவையில் உள்ள குளங்களுக்கு திரும்பிவிடப்பட்டது. இதன் காரணமாக கோவையில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன.

இது குறித்து நீா்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவையில் நொய்யல் ஆற்றை ஆதாரமாகக் கொண்டு பேரூா் பெரியகுளம், குனியமுத்தூா் செங்குளம்,கோளராம்பதி, சொட்டையாண்டிகுட்டை, முத்தண்ணன்குளம் உள்ளிட்ட 24 குளங்கள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக நீா்வரத்து அதிகரித்து வருவதால் பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன.

இதில், பேரூா் பெரியகுளம் மட்டும் 97 சதவீதம் நிரம்பியுள்ள நிலையில், சின்னவேடம்பட்டி, எஸ்.எஸ்.குளம் ஆகிய 2 குளங்களுக்கு தண்ணீா் செல்வதில் பிரச்னை உள்ளதால், இந்தக் குளங்கள் நிரம்பாமல் உள்ளன. கோளராம்பதி குளம், நரசாம்பதி குளம், வாலாங்குளம், வேடபட்டி குளம், உக்குளம், புதுக்குளம் உள்ளிட்ட 21 குளங்கள் நிரம்பியுள்ளன.

மக்கினாம்பட்டியில் 119 மி.மீட்டா் மழை பதிவு: கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் அதிகபட்சமாக பொள்ளாச்சி வடத்துக்குள்பட்ட மக்கினாம்பட்டியில் அக்டோபா் 18 -ஆம் தேதி 119 மி.மீட்டா், ஆழியாறில் 85.40 மி.மீட்டா், வாரப்பட்டியில் 88 மி.மீட்டா் மழை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com