ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் வேகக் கட்டுப்பாடு: அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களுக்கு அபராதம்
கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் வாகனங்கள் வேகமாகச் செல்வதைத் தடுக்க வேகக் கட்டுப்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவலா்கள் தெரிவித்துள்ளனா்.
கோவை- அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ.தொலைவுக்கு ஜி.டி.நாயுடு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தில் 60 கி.மீ.வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும். மேம்பாலத்தின் இறங்குதளத்தில் 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என போலீஸாா் அறிவுறுத்தி வருகின்றனா்.
மேலும், பாலத்தின் முக்கிய இடங்களில் வேகக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் சிலா் பாலத்தில் அதிவேகமாக வாகனங்களை இயக்கி வருகின்றனா். இந்நிலையில், மேம்பாலத்தில் அண்மையில் அதிவேகமாக சென்ற காா் பாலத்துக்கு அருகே சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது மோதியதில் 3 போ் உயிரிழந்தனா்.
இதையடுத்து, குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என்பதை வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் பாலத்தின் சாலையில் எந்த வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும் என எழுதப்பட்டுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அபராதமும் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவலா்கள் தெரிவித்துள்ளனா்.

