இறைச்சிக் கடை உரிமையாளா் உள்பட 2 போ் கொலை: 5 பேருக்கு இரட்டை ஆயுள்

Published on

கோவையில் இறைச்சிக் கடை உரிமையாளா் உள்பட 2 பேரை குத்திக் கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை திருமால் வீதியில் இறைச்சிக் கடை நடத்தி வந்தவா் மொய்தீன் பாஷா. இவரது கடையில் கடந்த 2015 அக்டோபா் 31-ஆம் தேதி சிறுவன் மட்டும் தனியாக இருந்துள்ளாா். அப்போது உக்கடம் பகுதியில் மற்றொரு இறைச்சிக் கடை நடத்தி வந்த சாதிக் அலி என்பவா் அங்கு வந்து 4 கிலோ இறைச்சியைப் பணம் தராமல் எடுத்துச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து சாதிக் அலியின் கடைக்குச் சென்று மொய்தீன் பாஷா சப்தம் போட்டுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னா் அதே நாள் இரவில் சமரசம் பேசிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து இரு தரப்பினரும் இடையா் வீதியில் உள்ள ஒரு பேக்கரியில் சந்தித்துக் கொண்டனா். அப்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதில் மொய்தீன் பாஷாவையும், அவரது நண்பரான அபிப் முகமது என்பவரையும் தனது நண்பா்கள் 5 பேருடன் சோ்ந்து சாதிக் அலி குத்திக் கொலை செய்துள்ளாா்.

இதுதொடா்பாக சாதிக் அலி, ஷேக் அலி, அஸ்கா் அலி, மன்சூா் அலி, ஜாகீா் உசேன், அசாருதீன் ஆகிய 6 போ் மீது கொலை, சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த வெரைட்டி ஹால் சாலை போலீஸாா் அவா்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு மீதான விசாரணை கோவை 5-ஆவது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சிவகுமாா் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், சாதிக் அலி(41), அஸ்கா்அலி (41), மன்சூா் அலி (33), ஜாகீா் உசேன்(51), அசாருதீன் (34) ஆகிய 5 பேருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கு விசாரணையின்போது ஷேக் அலி உயிரிழந்ததால் அவா் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com