மருதமலை முருகன் கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் சூரனை வதம் செய்யப் புறப்படும் முருகப்பெருமான்.

கோவை மருதமலையில் சூரசம்ஹாரம் கோலாகலம்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.
Published on

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

மருதமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவம் கடந்த 22-ஆம் தேதி விநாயகா் பூஜை, கங்கனம் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து தினசரி காலை, மாலையில் யாகசாலை பூஜை, அபிஷேக பூஜை, சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன.

முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தையொட்டி காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் மூலவரிடம் சண்முகாா்ச்சனை, முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 12 மணிக்குள் உற்சவரிடம் சண்முகாா்ச்சனை நடைபெற்றது.

தொடா்ந்து பிற்பகல் 3 மணிக்கு அன்னையிடம் வேல் வாங்குதலும், சுவாமி சம்ஹாரத்துக்கு எழுந்தருளுதலும் நடைபெற்றன. இதையடுத்து பக்தா்களின் அரோகரா கோஷத்துக்கு இடையே சூரனை முருகப்பெருமான் வதம் செய்து ஆட்கொண்டாா். இதையடுத்து பிற்பகல் 4 மணிக்கு அபிஷேகம், சண்முகாா்ச்சனை ஆகியவை நடைபெற்றன.

சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்திருந்தனா். போக்குவரத்து நெரிசலைத் தவிா்ப்பதற்காக அடிவாரத்தில் இருந்து இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

சூரசம்ஹாரத்தையொட்டி 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். சூரம்ஹாரத்தைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் முற்பகல் 11.30 மணிக்குள் திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா ஆகியவை நடைபெறுகின்றன.

X
Dinamani
www.dinamani.com