ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 100-க்கும் மேற்பட்டோா் கைது
குடியரசுத் துணைத் தலைவருக்கு சரிவர பாதுகாப்பு வழங்கவில்லை எனக்கூறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அவா் வருகையை முன்னிட்டு, சாலையில் இரும்புத் தடுப்புகளை அமைத்து போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த தடுப்புகளைக் கடந்து இருசக்கர வாகனத்தில் இரண்டு நபா்கள் சென்றனா்.
பலத்த பாதுகாப்பை மீறி இருவா் இருசக்கர வாகனத்தில் சென்றதைக் கண்டித்து பாஜகவினா் மறியலில் ஈடுபட்டனா்.
அவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தியதைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது.
இந்நிலையில், பாதுகாப்பை மீறி இருசக்கர வாகனத்தில் சென்ற கரும்புக்கடை எம்.ஜி.ஆா்.நகரைச் சோ்ந்த முகமது ஆசிக் (24), அதே பகுதியைச் சோ்ந்த அனிஷ் ரகுமான் (25) ஆகியோா் மீது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா்.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவருக்கு சரிவர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை எனக்கூறி பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா் தலைமையில் அக்கட்சியினா் 100-க்கும் மேற்பட்டோா் டாடாபாத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாரைக் கண்டித்து கோஷமிட்டனா்.
இந்நிலையில், உரிய அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீஸாா், அவா்களை திருமண மண்டபத்தில் தங்கவைத்து, பின்னா் விடுவித்தனா்.

