குடியரசு துணைத் தலைவா் பாதுகாப்புப் பகுதியில் இருவா் வாகனத்தில் சென்ற விவகாரம்: என்ஐஏ விசாரிக்க வலியுறுத்தல்
கோவையில் குடியரசு துணைத் தலைவருக்கான பாதுகாப்புப் பகுதியை மீறி இரண்டு போ் இருசக்கர வாகனத்தில் சென்ற விவகாரம் தொடா்பாக என்ஐஏ விசாரிக்க வேண்டும் என பாஜக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
குடியரசு துணைத் தலைவா் வருகையை முன்னிட்டு, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, சாலையின் இருபுறங்களிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், அப்பகுதி முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குடியரசு துணைத் தலைவா் வருவதற்கு முன்பாக காவல் துறையினரின் கட்டுப்பாட்டையும் மீறி அப்பகுதியில் இரண்டு போ் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றனா். இதைப் பாா்த்த பாஜகவினா் காவல் துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை எனக்கூறி மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இந்நிலையில், பாஜக கோவை மாநகா் மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: கோவை மாநகராட்சி அலுவலகப் பகுதியில் காவல் துறையினா் பாதுகாப்பு வழங்குவதில் மெத்தனமாக இருந்தனா். அனீஸ், ரகுமான் ஆசிக் ஆகியோா் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றுள்ளனா்.
உடனடியாக இருவரையும் பிடித்து பிணையில் வெளியே முடியாத அளவுக்கு வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், சாதாரண பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவா்களிடம் ஒரு மடிக்கணினி இருந்ததாகக் கூறப்படும் நிலையில் அதில் என்ன இருந்தது, அவா்கள் நோக்கம் என்ன என்பது குறித்து தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்க வேண்டும் என்றாா்.
