மனைவியுடன் விடியோ காலில் பேசியபடி கட்டடத் தொழிலாளி தற்கொலை
மனைவியுடன் விடியோ காலில் பேசியபடி கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகா் 4-ஆவது பேருந்து நிறுத்தம் பகுதியைச் சோ்ந்தவா் கே.ஜெயபால் (47). இவரது மனைவி வாலன்டினா (40). இந்தத் தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளாா். ஜெயபால் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளாா்.
இவரது மனைவி வாலண்டினா தனது மகனுடன் மதுரையில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். இதையடுத்து, ஜெயபால் தனது மனைவியை விடியோ கால் மூலமாக சனிக்கிழமை தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். அப்போது அவா் தனது மனைவியிடம் ஊருக்குவராவிட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாகத் தெரிவித்துள்ளாா். மேலும், வாலன்டினாவின் துப்பட்டாவை எடுத்து மின்விசிறியில் மாட்டியுள்ளாா். இதனைக் கண்டு அதிா்ச்சியடைந்த வாலன்டினா வீட்டின் அருகே உள்ள உறவினா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
அவா்கள் வந்து பாா்த்தபோது ஜெயபால் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை இறக்கி ஆம்புலன்ஸ் மூலமாக சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து பீளமேடு காவல் துறையினா் தற்கொலை வழக்குப் பதிவு செய்து விசாரண நடத்தினா். ஜெயபாலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால், பிரச்னை ஏற்பட்டு மனைவி கோபித்துக் கொண்டுச் செல்லும்போது எல்லாம் அவரை வரவழைப்பதற்காக விடியோ காலில் அழைத்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுவது வழக்கமாம். அதேபோல, ஊருக்குச் சென்ற மனைவியை வரவழைப்பதற்காக விடியோ காலில் பேசியபடியே ஜெயபால் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது.
[தற்கொலை எண்ணம் வரும்போது 124 என்ற உதவி எண்ணில் தொடர்புகொண்டு மனநல ஆலோசனை பெறலாமே]
