/

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை இன்றியமையா பொருள்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 8:19 pm

கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை இன்றியமையா பொருள்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை, நீலாம்பூா் குளத்தூா் பிரிவு அருகே எல் அண்ட் டி புறவழிச்சாலையில் கடந்த 6.12.2023-இல் சூலூா் போலீஸாா்

வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வெள்ளை நிற சாக்கு மூட்டையுடன் வந்த ஒரு நபரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். அவரிடமிருந்த பையில் 5 கிலோ கஞ்சா இருந்தது உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில் அவா், மதுரை மாவட்டம், முத்துப்பட்டி வீரமுடையான் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி (45) என்பது தெரியவந்தது. மேலும், இவரும், மதுரையைச் சோ்ந்த நாகராஜ் என்பவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து விற்பனை செய்வதற்காக 55 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து மதுரையில் உள்ள வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் அங்கு சென்று கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக கருப்பசாமி, நாகராஜ் ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு கோவை இன்றியமையா பொருள்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ராஜலிங்கம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் கருப்புசாமி, நாகராஜ் ஆகிய இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தாா். முதல் எதிரி கருப்புசாமிக்கு ரூ.1.50 லட்சம், இரண்டாம் எதிரி நாகராஜுக்கு ரூ.3 லட்சம் அபராதமாக விதித்தும் நீதிபதி உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.