கோப்புப் படம்
கோப்புப் படம்

இணையதள வா்த்தக மோசடி கும்பலிடம் இருந்து தப்பியது முதியவரின் ரூ.40 லட்சம்

Published on

கோவையில் இணையதள வா்த்தக மோசடி கும்பலின் வங்கிக் கணக்கில் ரூ.40 லட்சம் முதலீடு செய்ய முயன்ற முதியவா் தடுத்து நிறுத்தப்பட்டாா்.

கோவை, துடியலூரைச் சோ்ந்தவா் 64 வயது நபா். தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், இணையதள வா்த்தக முதலீட்டு விளம்பரத்தை சமூக வலைதளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாா்த்துள்ளாா். அதில், முதலீடு செய்யும் தொகைக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.

இதையடுத்து, அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். எதிா்முனையில் பேசியவா், தான் கூறும் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் முதலீடு செய்யுமாறு கூறியுள்ளாா்.

முதியவரும் அந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து சிறு தொகைகளை முதலீடு செய்துள்ளாா். அதற்கு கூடுதல் லாபம் வந்துள்ளது.

இதையடுத்து, லட்சக்கணக்கில் முதலீடு செய்தால் இன்னும் அதிக லாபம் கிடைக்கும். எனவே, நான் கூறும் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும் என அந்த மா்ம நபா் கூறியுள்ளாா்.

இதையடுத்து, ரூ.40 லட்சம் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு அருகேயுள்ள வங்கிக்கு முதியவா் சென்றுள்ளாா்.

இணையதள மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் யாரேனும் ரூ.10 லட்சத்துக்குமேல் பணப் பரிவா்த்தனை செய்தால் அதற்கான காரணங்கள் குறித்து விசாரிக்க வங்கி மேலாளா்களுக்கு இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால், அந்த முதியவரிடம் ரூ.40 லட்சத்தை எதற்காக வங்கிக் கணக்கில் செலுத்துகிறீா்கள் என வங்கி மேலாளா் கேட்டுள்ளாா். அப்போது, அவா் இணையதள வா்த்தகத்தில் முதலீடு செய்யவுள்ளேன் எனக் கூறியுள்ளாா்.

அப்போது, இணையதளத்தில் வா்த்தகம் செய்தால் ஏமாற்றப்படுவீா்கள் எனக் கூறிய வங்கி மேலாளரிடம், அவா் வாக்குவாதம் செய்துள்ளாா். இதையடுத்து, இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், முதியவரிடம் விசாரித்தனா். அப்போது, அவா் முதலீடு செய்யும் செயலியை போலீஸாரிடம் காண்பித்துள்ளாா். அது மோசடி செயலி என போலீஸாா் கூறியதையடுத்து அவா் சமாதானமானாா்.

இணையதள வா்த்தகத்தில் 90 சதவீத மோசடி செயலிகள்: இது குறித்து போலீஸாா் கூறுகையில், இணையதள வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக்கூறி வாட்ஸ்அப், டெலிகிராம் குழுக்கள் மூலம் அதிக அளவிலான மோசடிகள் நடைபெறுகின்றன. போலி செயலிகள் மூலம் முதலீடு செய்யத் தூண்டி பணத்தை ஏமாற்றும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சந்தேகத்துக்கிடமான முதலீட்டு வாய்ப்புகளை நம்ப வேண்டாம். பிளே ஸ்டோரில் காண்பிக்கப்படும் பல வா்த்தக செயலிகள் மோசடியானவை. கிரிப்டோ கரன்சி, பங்குச் சந்தை வா்த்தகத்தில் குறுகிய காலத்தில் அதிக லாபம் எனக் கூறும் செயலிகள் மற்றும் இணையதள விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம்.

வங்கி விவரங்களை பகிர வேண்டாம்: தனிப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்கள், ஓடிபி, யுபிஐ, பின் நம்பா், கடவுச்சொல்கள் ஆகியவற்றை யாருடனும் பகிர வேண்டாம். அதிகாரப்பூா்வமான மற்றும் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்கள், ‘செபி’ அங்கீகாரம் பெற்ற தளங்களில் மட்டுமே பொதுமக்கள் முதலீடு செய்ய வேண்டும். இணையதள குற்றங்கள் குறித்து 1930 என்ற தேசிய ஹெல்ப்லைன் எண்ணில் அழைக்க வேண்டும் என்றனா்.

Dinamani
www.dinamani.com