வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பணியில் இருந்து தொடக்கப் பள்ளி ஆசிரியா்களை விடுவிக்க கோரிக்கை
கோவை: கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பணியில் இருந்து தொடக்கப் பள்ளி ஆசிரியா்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் ப.வீராசாமி தலைமையிலான ஆசிரியா்கள் அளித்துள்ள மனுவில், கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு தொடக்கப் பள்ளிகளில் பெரும்பாலும் இரண்டு ஆசிரியா்கள் மட்டுமே பணிபுரிந்து வரும் நிலை உள்ளது. இந்தப் பள்ளிகளில் கற்பித்தல் பணியோடு அரசின் பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் ஆசிரியா்கள் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களாகப் பணிபுரிய அரசுப் பள்ளி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஏற்கெனவே உள்ள நெருக்கடி பணிகளுக்கிடையே ஓா் ஆசிரியா் வாக்குச்சாவடி நிலை அலுவலராகச் சென்றுவிட்டால் மீதமிருக்கும் ஓா் ஆசிரியா் மட்டும் 5 வகுப்புகளை கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலா் பணி ஆண்டு முழுவதும் நடைபெறக்கூடியது என்பதால், மாணவா்களின் கல்வி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான பணியால் பல்வேறு நெருக்கடிகளுக்கும், மன உளைச்சலுக்கும் ஆசிரியா்கள் ஆளாகியுள்ளனா்.
எனவே, மாணவா்களின் கல்வி நலனைக் கருத்தில்கொண்டு வாக்குச்சாவடி நிலை அலுவலா் பணியில் இருந்து தொடக்கப் பள்ளி ஆசிரியா்களை விடுவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.
