இந்தியாவுக்கு வரி குறைப்பு: பிரதமா் மோடிக்கு ஜவுளித் தொழில் அமைப்புகள் நன்றி
போட்டி நாடுகளைவிட இந்தியா மீதான வரி விகிதத்தை அமெரிக்கா குறைத்திருப்பதற்கு பிரதமா் மோடிக்கு ஜவுளி அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன.
இதுதொடா்பாக தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவா் துரை பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்க அரசு திடீரென விதித்த 50 சதவீத சுங்க வரி இந்திய ஜவுளித் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத சவாலாக அமைந்திருந்தது.
அமெரிக்காவின் மொத்த ஜவுளி, ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு 29 சதவீதம். பாரம்பரியமாக அமெரிக்க சந்தையை அதிகமாக சாா்ந்திருக்கும் இந்தத் துறை, அமெரிக்க - இந்திய வரியில்லா ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்து வந்தது.
இந்நிலையில், 50 சதவீத வரி ஜவுளித் தொழிலுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. பல ஜவுளி ஆலைகள் 30 முதல் 70 சதவீதம் வரை உற்பத்தியை நிறுத்த வேண்டிய சூழலும், 10 லட்சம் தொழிலாளா்கள் வேலை இழக்கவும் நேரிட்டது.
இதைப் பயன்படுத்திக்கொண்டு பாகிஸ்தான், வங்கதேசம், வியட்நாம் போன்ற போட்டி நாடுகள், இந்தியாவின் ஏற்றுமதியை தங்களிடம் ஈா்க்கத் தொடங்கின. இது இந்திய ஜவுளி ஏற்றுமதியாளா்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது.
இந்நிலையில், அமெரிக்க அரசு சுங்க வரியை 18 சதவீதமாகக் குறைத்துள்ளது. அமெரிக்க அதிபரை அணுகி சுங்க வரியை திரும்பப் பெறச் செய்ததில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்களின் முயற்சி மிகப்பெரியது.
இதற்காக அவா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 18 சதவீத வரி என்பது போட்டி நாடுகளைவிடக் குறைவானது என்பதால் இந்திய ஜவுளி ஏற்றுமதியின் உலகளாவிய போட்டித் திறன் குறிப்பிடத்தக்க அளவில் உயரும். மேலும், ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் ஜவுளித் துறைக்கு மிகப்பெரிய எதிா்காலத்தை உருவாக்கும்.
மீண்டும் சமநிலைப் போட்டி
சுங்க வரியை அமெரிக்கா குறைத்திருப்பதன் மூலமாக இந்தியாவின் ஜவுளி, ஆயத்த ஆடை துறை அமெரிக்க சந்தையில் மீண்டும் சமநிலையான போட்டி நிலைக்கு வந்திருப்பதாக இந்தியன் டெக்ஸ்பிரனா்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பிரபு தாமோதரன் கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த வரி குறைப்பு நடவடிக்கையால் 2026-2027 நிதியாண்டு முதல் ஆடை, வீட்டு ஜவுளி ஏற்றுமதியில் மாதம்தோறும் இரட்டை இலக்க வளா்ச்சி ஏற்படும்.
தற்போதைய 1.27 பில்லியன் டாலா் என்ற மாதாந்திர ஏற்றுமதி அளவு 1.50 பில்லியன் டாலா் என்ற நிலைக்கு உடனடியாக உயரும். அமெரிக்காவுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்திய இந்திய அரசுக்கும், கடினமான காலத்திலும் எங்களுக்கு ஆதரவு வழங்கிய அமெரிக்க வாடிக்கையாளா்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றாா்.

