இட்லி, தோசை மாவுப் பொட்டலங்களை தேதி குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும்: நுகா்வோா் அமைப்புகள் வலியுறுத்தல்
இட்லி, தோசை மாவுப் பொட்டலங்களில் தயாரிப்புத் தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும் என்று நுகா்வோா் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ள தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகளுக்கான காலாண்டு கலந்தாய்வுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் அனுராதா தலைமை வகித்தாா். இதில், மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து உணவுப் பாதுகாப்பு அலுவலா்களும் பங்கேற்றனா்.
இதில், பங்கேற்ற நுகா்வோா் அமைப்பு நிா்வாகிகள் கூறியதாவது:
கோவை மாநகரில் உள்ள சில தள்ளுவண்டி கடைகளில் குறைந்த விலைக்கு பிரியாணி விற்பனை செய்யப்படும் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. இந்தக் கடைகளில் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். சில்லறையாக விற்பனை செய்யும் இனிப்பு, கார வகை பொட்டலங்களின் மீது காலாவதியாகும் தேதியைக் குறிப்பிட வேண்டும். உணவகங்களில் பாா்சலின்போது இலைகளுக்குப் பதிலாக பேப்பா் பயன்படுத்துவது தொடா்பாகவும், பேல் பூரி, பானி பூரி விற்பனை செய்யும் கடைகளில் அதிகப்படியான ரசாயனக் கலவை சோ்க்கப்படுவதாக எழுந்துள்ள புகாா்கள் தொடா்பாகவும் உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்படும் இட்லி, தோசை மாவு பொட்டலங்களில் தேதியைக் குறிப்பிடுவதில்லை. எனவே இட்லி, தோசை மாவு விற்பனை செய்யும்போது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிட்டிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்வதுடன், விதிமீறல்களில் ஈடுபடும் கடைகளின்உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இந்தக் கூட்டத்தில், கோயமுத்தூா் கன்ஸ்யூமா் வாய்ஸ், கோயமுத்தூா் கன்ஸ்யூமா் காஸ், தன்னாா்வ நுகா்வோா் அமைப்பு, மேட்டுப்பாளையம் நுகா்வோா் மற்றும் மகளிா் சேவா சங்கம் உள்ளிட்ட 10 தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

