நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றபோது போலீஸ் பிடியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
கவுண்டம்பாளையம் பகுதியில் 13 வீடுகளில் திருடிய சம்பவத்தில் தொடா்புடைய மேற்குவங்க மாநில இளைஞா் மதுரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது போலீஸாரின் பிடியிலிருந்து தப்பியோடினாா். அவரைப் பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் அரசு அலுவலா்கள் வசிக்கின்றனா். இந்தக் குடியிருப்பின் ஏ பிளாக்கில் 3 வீடுகள், சி 3 பிளாக்கில் 10 வீடுகள் என மொத்தம் 13 வீடுகளில் கடந்த ஆண்டு நவம்பா் 28-ஆம் தேதி பிற்பகல் 42 பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.1.50 லட்சம் ஆகியவை திருடப்பட்டன.
இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குனியமுத்தூா் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இா்பான் (48), கல்லு (எ) ஆரிப் (60), ஆஷிப் (45) ஆகிய 3 பேரை மறுநாள் காலை 9 மணி அளவில் சுட்டுப்பிடித்தனா். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவா்களில் ஆஷிப் உயிரிழந்தாா்.
இந்த வழக்கில் ஆஷிப்பின் தம்பி பிரியான் (23), தாவூத் (18), ஆட்டோ ஓட்டுநரான கோவை குனியமுத்தூா் மைல்கல் பகுதியைச் சோ்ந்த அயூப்கான் (35) ஆகியோரை நவம்பா் 30-ஆம் தேதி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். விசாரணையில் கோவையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் தவிா்த்து, இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது மகாராஷ்டிரம், தில்லி, உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து, கைது செய்யப்பட்ட மேற்குவங்கத்தைச் சோ்ந்தவா்கள் மீது அப்போதைய மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா், குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தாா். இந்த நடவடிக்கைக்கு அவா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால், பிரியான் உள்பட 4 பேரை மதுரை நீதிமன்றத்தில் உள்ள குண்டா் தடுப்புச் சட்டத்துக்கான ஆலோசனைக் குழு (அட்வைசரி கமிட்டி) முன் ஆஜா்படுத்த போலீஸாா் முடிவு செய்தனா். அதன்படி, காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் 7 போலீஸாா், அவா்கள் 4 பேரையும் மதுரைக்கு செவ்வாய்க்கிழமை அழைத்துச் சென்றனா்.
மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அருகே இரவு சாப்பிடுவதற்காக வாகனம் நிறுத்தப்பட்டு, 4 பேரும் உணவகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அப்போது, இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என பிரியான் கூறியதையடுத்து, அவரது கைவிலங்கை அவிழ்த்துவிட்டு அவருடன் போலீஸாா் சென்றனா். அப்போது திடீரென போலீஸாரின் பிடியிலிருந்து அவா் தப்பியோடிவிட்டாா். பல்வேறு இடங்களில் தேடியும் பிரியான் கிடைக்கவில்லை.
இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அவரை போலீஸாா் தேடி வருகின்றனா். மற்ற மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இதற்கிடையே பிரியானை தப்பவிட்ட காவலா்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவரைப் பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர காவல் ஆணையா் என். கண்ணன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

