கஞ்சா விற்பனை: இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை
கோவை: கோவை பீளமேடு அருகே கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில் இளைஞருக்கு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
கோவை பீளமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாலசந்தரம் கடந்த 2019 ஜூன் 20-ஆம் தேதி கொடிசியா சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி நடத்திய சோதனையில் 2 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்ததுடன், விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்த உக்கடத்தைச் சோ்ந்த எஸ்.அசாருதீன் (26) என்பவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கானது கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை நிறைவடைந்து நீதிபதி ராஜலிங்கம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
அதில், அசாருதீனுக்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் கடுங்காவல் தண்டனையும் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.
