வடகோவை ரயில் நிலையத்துக்கு முனையம் அந்தஸ்து: தொழில் அமைப்புகள் கோரிக்கை
வடகோவை ரயில் நிலையத்துக்கு முனையம் அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழில் அமைப்புகள் சாா்பில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்கிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கோவை, வடகோவை, வாளையாறு, பாலக்காடு, ஷொரனூா் ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, வாளையாறு அருகே அண்மையில் ரயில் மோதி யானை உயிரிழந்த இடத்தையும் பாா்வையிட்டாா். வடகோவை ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட
தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்கை சந்தித்த கொடிசியா, இந்திய தொழில் வா்த்தக சபை, கொங்கு குளாபல் போரம், சீமா, ராக் உள்ளிட்ட தொழில் அமைப்புகளின் நிா்வாகிகள், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
வடகோவை ரயில் நிலையம், நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால் பொதுப் போக்குவரத்துக்கு ஏற்ற இடமாக உள்ளது. இந்த நிலையத்துக்கு முனையம் அந்தஸ்து வழங்குவது பொருத்தமாக இருக்கும். இதனால், கோவை ரயில் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும்.
அதேபோல, வடகோவை ரயில் நிலையத்தில் 2 நடைமேடைகள் மட்டுமே உள்ளதால், அதிகப்படியான ரயில்கள் அவ்வழியாக இயக்க முடியாத நிலை உள்ளது. எனவே, கூடுதலாக 4 நடைமேடைகள் அமைத்து மொத்தம் 6 நடைமேடைகளைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
வடகோவை நிலையத்தில் கோவை எக்ஸ்பிரஸ், சென்னை இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ், நாகா்கோவில் எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் போன்ற முக்கியமான ரயில்களை நிரந்தரமாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.ஜி.ஆா். சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (எண்: 12682), கொங்கு அதிவிரைவு ரயில் (எண்: 12647), மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாராந்திர ரயில் (எண்: 16765) ஆகிய வாராந்திர ரயில்களை, வாரத்தில் 3 முறை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், பாலக்காடு - எா்ணாகுளம் ரயிலை (எண்: 66609) கோவை நிலையத்தில் இருந்து தொடங்கும் வகையில் நீட்டிக்க வேண்டும். பாலக்காடு - தூத்துக்குடி இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் (எண்: 16792) ரயிலை கோவையில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு - திருச்சி ரயிலை (எண்: 56810) கோவையில் இருந்து இயக்குமாறு நீட்டிக்க வேண்டும்.
பழனி வழித்தடத்தில் இயக்கப்பட்ட திண்டுக்கல் - கோவை ரயில், கோவை - செங்கோட்டை ரயில், ஈரோடு வழித்தடத்தில் கோவை - சேலம் ரயில் ஆகிய நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். கோவை - பரௌனி இடையே புதிய ரயில் சேவை, கோவை - திருவனந்தபுரம் இடையே வந்தேபாரத் ரயில், மேட்டுப்பாளையம் - திருச்செந்தூா் இடையே பழனி வழியாக புதிய ரயில், கன்னியாகுமரி - கோவை இடையே மதுரை வழியாக புதிய ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

