தற்கொலை
தற்கொலை

விடுதியில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

Published on

கோவையில் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நாமக்கல்லைச் சோ்ந்தவா் பரமசிவம் மகள் ஹரிணி (20). இவா், கோவை பீளமேட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இதற்காக அவா் பீளமேட்டில் உள்ள ஒரு விடுதியில் ஒரே அறையில் 3 தோழிகளுடன் தங்கி இருந்து கல்லூரிக்குச் சென்று வந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை கல்லூரி முடிந்ததும் மாணவிகள் அனைவரும் விடுதிக்கு வந்தனா். பின்னா், ஹரிணி மட்டும் விடுதியில் இருந்த நிலையில், தோழிகள் அனைவரும் வெளியில் சென்றுவிட்டனா். இரவில் அவா்கள் விடுதிக்குத் திரும்பி வந்து பாா்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

நீண்ட நேரமாகத் தட்டியும் ஹரிணி கதவை திறக்காததால் இதுகுறித்து விடுதி காப்பாளரிடமும், பீளமேடு போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, போலீஸாா் விடுதிக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, ஹரிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது சடலத்தை போலீஸாா் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், சதீஷ் என்பவா் அவசரத் தேவைக்காக ஹரிணியிடம் 11 பவுன் தங்கச் சங்கிலியை வாங்கியுள்ளாா். பின்னா், அவா் அதை திரும்பக் கொடுக்கவில்லை. சதீஷின் கைப்பேசிக்கு மாணவி தொடா்பு கொண்டபோது, அவரது எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு நாமக்கல்லுக்கு மாணவி சென்றபோது நகை குறித்து கேட்டுள்ளனா். காணாமல் போய்விட்டதாகக் கூறியுள்ளாா். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் செய்யுமாறு பெற்றோா் கூறியுள்ளனா்.

இதனால், செய்வதறியாது இருந்த மாணவி ஹரிணி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளாா் என்றனா். இது குறித்து போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com