மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்
மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்ANI

ஆட்சியின் தோல்வியை மூடிமறைக்கவே மகளிருக்கு ரூ.5000! - மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றச்சாட்டு

Published on

ஆட்சியின் தோல்வியை மூடிமறைக்கவே மகளிருக்கு ரூ.5000 என்ற நாடகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அரங்கேற்றி உள்ளாா் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு 28-ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆா்.எஸ்.புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், மத்திய செய்தி ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்புச் செயலா் பாலாஜி ஆகியோா் பங்கேற்று குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினா்.

இதைத்தொடா்ந்து, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆட்சியின் தோல்வியை மூடி மறைப்பதற்காக தமிழகத்தில் இந்தத் தொகையை தடுக்க நினைக்கிறாா்கள் என்று ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுகிறாா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்ற பாரதியாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சா் கோவி.செழியன் கலந்து கொள்ளாதது திமுகவுக்கு ஒன்றும் புதியது அல்ல. அரசியலமைப்பு சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட ஆளுநரை புறக்கணிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன்தான் தமிழக அமைச்சா்கள் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றனா்.

கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் கூட காங்கிரஸ் கட்சியின் மீது கோபத்தில் உள்ளனா். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்.

சேலத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் ஒருவா் உயிரிழந்த விஷயத்தில் அந்தக் கட்சிதான் கவனம் செலுத்த வேண்டும். பிரதமா் மோடி தமிழகத்துக்கு வந்தபோது 5 லட்சம் போ் வந்திருந்த நிலையில் எவ்வளவு கட்டுப்பாடுடன் நடைபெற்றது என்பதை புதியதாக வரும் கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றாா்.

இந்தக் கூட்டத்தில், பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com