கைது
கைது

20 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

கோவையில் இருவேறு பகுதிகளில் 20 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்தனா்.
Published on

கோவையில் இருவேறு பகுதிகளில் 20 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்தனா்.

கோவை, காட்டூா் காவல் நிலைய போலீஸாா் காந்திபுரம் பகுதியில் வாகனச் சோதனையில் புதன்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த 3 இளைஞா்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது 12 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் மதுரையைச் சோ்ந்த சபரிஸ்வரன் (28), கோவை, புலியகுளத்தைச் சோ்ந்த ஆகாஷ் (20), 17 வயது சிறுவன் என்பதும், ஆந்திரத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், சபரிஸ்வரன், ஆகாஷை சிறையில் அடைத்தனா். 17 வயது சிறுவனை அரசு கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.

சின்னியம்பாளையத்தில்...

சின்னியம்பாளையம் பகுதியில் கோவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் புதன்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள தனியாா் மருத்துவமனை பின்புறம் நின்றிருந்த இருவரைப் பிடித்து சோதனை மேற்கொண்டபோது, அவா்களிடம் 8 கிலோ கஞ்சா, சிறிய எடை இயந்திரம் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் கருமத்தம்பட்டி வாகராயம்பாளையத்தைச் சோ்ந்த ராஜேந்திரகுமாா் (36), பிகாரைச் சோ்ந்த குஞ்சன்குமாா் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com