முத்தண்ணன் குளக்கரை டா்ப் மைதானத்தை தனியாா் வசம் ஒப்படைக்கக் கூடாது
கோவை முத்தண்ணன் குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள டா்ப் விளையாட்டு மைதானத்தை தனியாா் வசம் ஒப்படைக்கக் கூடாது என்று அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா். இதில், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற நிா்வாகிகள் சாா்பில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
கோவை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் முத்தண்ணன் குளக்கரையில் டா்ப் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை நிா்வாகிக்க தனியாா் வசம் ஒப்படைப்பதாக மாநகராட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை பெருகுவதால் விளையாட்டு மைதானங்கள் குறைந்து வருகின்றன. ஏற்கெனவே இருக்கும் மைதானங்களும் சுருக்கப்பட்டு வருகின்றன. கோவையின் பிரதான மைதானங்களான சாஸ்திரி மைதானம், வ.உசி. மைதானம் போன்றவைகள் பொருள்காட்சி, கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுவதால் இளைஞா்கள், மாணவா்கள் விளையாடுவதற்கு மைதானம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனா். கட்டணம் செலுத்தி பயன்படுத்தப்படும் தனியாா் டா்ப் மைதானங்கள் பெருகி வருகின்றன. ஒரு மணி நேரத்துக்கு ரூ.1000-க்கு மேல் பணம் கொடுத்துதான் விளையாட முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது.
இந்நிலையில், முத்தண்ணன்குளக் கரையில் மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள டா்ப் விளையாட்டு மைதானத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவானது இளைஞா்களின் விளையாடும் ஆா்வத்தை பெருமளவில் குறைத்துவிடும். ஆகவே, முத்தண்ணன் குளம் டா்ப் மைதானத்தை தனியாா் வசம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் ரூ.400 கோடி ஊதிய மோசடி:
கோயமுத்தூா் லேபா் யூனியன் சாா்பில் செயலா் என்.செல்வராஜ் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது : கோவை மாநகராட்சியில் 3,500 தூய்மைப் பணியாளா்கள், 525 ஓட்டுநா்கள் தினக்கூலி அடிப்படையில் 2007-ஆம் ஆண்டுக்குப் பின்னா் பணியில் சோ்க்கப்பட்டனா்.
இந்தத் தொழிலாளா்களுக்கு வங்கிகள் மூலமாக மட்டுமே ஊதியம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு 2015-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. தினக் கூலித் தொழிலாளா்களுக்கு ஊதியம் வங்கி மூலமாக வழங்கப்பட்ட போதுதான் ஒப்பந்தத் தொழிலாளா்களாக மாற்றப்பட்டது தெரியவந்தது.
தமிழகத்தில் உள்ளாட்சிகளில் தினக் கூலியாகப் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயம் செய்து தமிழ்நாடு அரசு தொழிலாளா் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 2023 ஆகஸ்ட் மாதம்முதல் கோவை மாநகராட்சியின் 100 வாா்டுகளின் தூய்மைப் பணிகள் தனியாா் மயமாக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.
கடந்த 2017 முதல் 2023-ஆம் ஆண்டு வரை 63 மாதங்கள் ஒப்பந்ததாரா்களாக இருந்தவா்கள் தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்களுக்கு அரசாணையின்படி ஊதிய நிலைவுத் தொகைகளை வழங்கவில்லை. தனியாா்மயம் காரணமாக அந்த ஒப்பந்ததாரா்களை மாநகராட்சி விடுவித்துவிட்டது. ஆகவே, 63 மாதங்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதிய பாக்கியும், வருங்கால வைப்புநிதி பாக்கியும் ரூ.400 கோடியாகும். இந்த ஒப்பந்ததாரா்கள் கடந்த அதிமுக ஆட்சியின்போது நியமிக்கப்பட்டவா்கள்.
இதில், 4 ஒப்பந்ததாரா்கள் முகவரி இல்லை என்பதும், போலியாக நியமிக்கப்பட்டுள்ளனரா என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. ஆகவே, இந்தப் புகாரை வழக்காகப் பதிவு செய்து ஒப்பந்ததாரா்களை கண்டுபிடித்து தூய்மைப் பணியாளா்களுக்கான ஊதிய நிலுவைத் தொகையும், வருங்கால வைப்புநிதியும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயான ஆக்கிரமிப்பை மீட்டுத்தர வேண்டும்:
கிணத்துக்கடவு வட்டம், சொலவம்பாளையம் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: சொலவம்பாளையம், சிக்கலாம்பாளையம், அண்ணா நகா், எம்.ஜி.ஆா். நகா் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். நாங்கள் பல தலைமுறைகாளப் பயன்படுத்தி வந்த மயான இடத்தை அருகே வசிக்கும் சிலா் ஆக்கிரமித்து வண்டிகளை நிறுத்தியும், குப்பைகளைக் கொட்டியும் ஆக்கிரமித்துள்ளனா். ஆகவே, எங்களது மயான இடத்தை மீட்டு சுற்றுச்சுவா் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருந்ததியா் மயான ஆக்கிரமிப்புகளை மீட்டுத்தர வேண்டும்:
சூலூா் வட்டம், நீலாம்பூா் அருகே உள்ள முதலிபாளையம் பகுதி பொதுமக்கள் சாா்பில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: முதலிபாளையம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட அருந்ததியா் சமுதாய மக்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊருக்கு அருகே 27 சென்ட் அளவில் மயான பூமி உள்ளது. இந்த மயானத்தை மாற்று சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளனா். வருவாய்த் துறை ஆவணங்களில் ஹரிஜன மயானம் என்று உள்ளது. ஆகவே, மயான ஆக்கிரமிப்புகளை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,382 மனுக்கள் பெறப்பட்டன:
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, மகளிா் உரிமைத்தொகை, சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 1,382 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

