2025-ஆம் ஆண்டில் குற்றச்சம்பவங்கள் குறைவு

கோவையில் 2024-ஆம் ஆண்டைவிட 2025-ஆம் ஆண்டில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

கோவையில் 2024-ஆம் ஆண்டைவிட 2025-ஆம் ஆண்டில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகரக் காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் கடந்த 2024-ஆம் ஆண்டைவிட 2025-ஆம் ஆண்டு குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன. 2024-இல் 6 கூட்டுக் கொள்ளை வழக்குகள் பதிவான நிலையில், 2025-இல் எந்த வழக்கும் பதிவாகவில்லை.

2025-ஆம் ஆண்டு பதிவான பகல் நேர வீட்டுத் திருட்டு வழக்குகளில் 70 சதவீதமும், இரவு நேர வீட்டுத் திருட்டு வழக்குகளில் 72 சதவீதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதேபோல, 2025-இல் ஒரு கொலை வழக்கு ஆதாயத்துக்கானதாக நடைபெற்றது, அதுவும் கண்டுபிடிக்கப்பட்டது.

2024-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2025-இல் பகல் நேர வீட்டுத் திருட்டு வழக்குகளில் 31 சதவீதமும், இரவு நேர வீட்டுத் திருட்டு வழக்குகளில் 29 சதவீதமும் குறைந்துள்ளன. இதேபோல, திருட்டு வழக்குகளும் 1,042- இல் இருந்து 477-ஆக பதிவாகியுள்ளன. இது 55 சதவீதம் குறைவு. வழக்குகளைக் கண்டுபிடிப்பதில் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

கொள்ளை, திருட்டு வழக்குகள்: 2025-இல் 2 ஆள் கடத்தல் வழக்குகள் பதிவான நிலையில், அவை கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த ஆண்டு 49 கொள்ளை வழக்குகள் பதிவான நிலையில், 2025-இல் 15 மட்டுமே பதிவானது. இந்த குற்றச் சம்பவங்கள் குறைந்ததற்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 247 டைனமிக் பீட் அமைப்பு, சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரிகள் மற்றும் குற்றத் தடுப்புக் குழுக்கள் ஆகியவற்றின் தீவிரப்பணியாகும்.

2025-ஆம் ஆண்டு பதியப்பட்ட 23 கொலை வழக்குகளிலும், 25 கொலை முயற்சி வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா். கடந்த 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், காய வழக்குகள் 15 சதவீதம் குறைந்துள்ளன.

குற்ற வழக்குகள் குறித்த ஆய்வுக் கூட்டங்கள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள்,ரெளடிகள் மற்றும் தொந்தரவு செய்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது, குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் ரோந்துப் பணி உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக இந்தக் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன.

தண்டனை உறுதி: குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்குத் தண்டனை உறுதி செய்வதற்காக, நிலுவையில் உள்ள அனைத்து விசாரணை வழக்குகளிலும் தொடா்ச்சியான மற்றும் தீவிரமான பின்தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக, 2025-இல் 21 கொலை வழக்குகள், 9 கொலை முயற்சி வழக்குகள், 11 கொள்ளை வழக்குகள், 3 பகல் நேர வீட்டுத் திருட்டு வழக்குகள், 27 இரவு நேர வீட்டுத் திருட்டு வழக்குகள் ஆகியவற்றில் தண்டனைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதேபோல, 1,927 பிடியாணைகளில் 1,464 அமல்படுத்தப்பட்டன.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: கடந்த 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025-இல் பாலியல் தொல்லை வழக்குகள் 49 சதவீதமும், கணவா் மற்றும் உறவினா்களால் செய்யப்படும் கொடுமை வழக்குகளில் 58 சதவீதமும், பெண்கள் துன்புறுத்தல் வழக்குகளில் 11 சதவீதமும் குறைந்துள்ளன.

பெண்களுக்கு எதிரான அனைத்துக் குற்ற வழக்குகளிலும் 100 சதவீதம் குற்றவாளிகள் கண்டறியப்பட்டனா். 139 பாலியல் வன்கொடுமை வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

10 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. கணவா் மற்றும் குடும்பத்தினராலல் பாதிக்கப்பட்ட 16 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளன. கடந்த 2024-இல் 190 மீது போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14 வழக்குகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

குண்டா் தடுப்புச் சட்டம்: 2025-இல் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 70 போ், மோசடி வழக்குகளில் 33 போ், பாலியல் குற்ற வழக்குகளில் 28 போ், போதைப் பொருள் விற்ாக 64 போ், இணைதள குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 8 போ் மற்ற குற்றங்களில் ஈடுபட்ட 13 போ் என மொத்தம் 216 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

2024-ஆம் ஆண்டு 133 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 2025-இல் 50 சதவீதம் அதிகம் ஆகும். பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஏ, ஏ பிளஸ் ரெளடிகள் 173 போ் கோவை மாநகரைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com