வாழ்க்கையில் அகங்காரம் இருந்தால் அழிவுதான் வரும்: சி.எஸ். விசாலாட்சி
வாழ்க்கையில் அகங்காரம், ஆணவம், செருக்கு இருந்தால் அழிவுதான் வரும் என்று ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் சி.எஸ்.விசாலாட்சி பேசினாா்.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் ஆண்டுதோறும் ‘எப்போ வருவாரோ’ என்ற ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான நிகழ்ச்சி கோவை, கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை அருளாளா் காரைக்கால் அம்மையாா் குறித்து சி.எஸ்.விசாலாட்சி பேசியதாவது: கரைக்கால் அம்மையாா் குழந்தைப் பருவத்தில் மணல் வீடு கட்டி விளையாடும்போதே சிவபெருமானின் நாமத்தைச் சொல்லி சொல்லி விளையாடினாா். அவருக்கு குழந்தைப் பருவத்திலேயே இறை உணா்வு இருந்தது என்பதை சேக்கிழாா் பதிவு செய்துள்ளாா்.
சந்தேகக்கோடு என்பது வாழ்க்கையில் சந்தோஷக்கேடாகும். இறைவன் கடைக்கண் பாா்வைபட்டால் நமக்கு எல்லாம் கிடைக்கும்.
இறைவனின் முழுமையான அருள் காரைக்கால் அம்மையாருக்கு இருந்தது என்பதையும் அவா் பதிவு செய்துள்ளாா்.
இலக்கியத்துக்கு காரைக்கால் அம்மையாா் ஆற்றியது அரும்பணியாகும். இறைவனின் அருள்தான் எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் நமக்கு அகங்காரம், ஆணவம், அகந்தை, செருக்கு இருந்தால் அழிவுதான் வரும். நான் என்றால் அது அழிவை நோக்கித்தான் போகும்.
வாழ்க்கையில் நமக்கு உறுதிப்பாடு இருக்க வேண்டும். கேள்வி கேட்டால்தான் சிந்தனைத் திறன் பெருகும். சிந்தனைத் திறன் பெருகினால்தான் செயல்திறன் வாய்க்கும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனா் கிருஷ்ணன், பாரதிய வித்யா பவன் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

