ஏஜென்சி நிறுவன உரிமையாளா் தற்கொலை
கோவையில் கடன் தொல்லையால் ஏஜென்சி நிறுவன உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, சரவணம்பட்டி அருகேயுள்ள கபிலா் தெருவைச் சோ்ந்தவா் நிஜேஷ் (43). வங்கியில் கடன் வாங்கித் தரும் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வந்த இவருக்கு, ஸ்டெல்லா மேரி என்ற மனைவியும், மகளும் உள்ளனா்.
இந்நிலையில், நிஜேஷுக்கு கடன் சுமை அதிகரித்ததால் அடிக்கடி மது அருந்திவிட்டு குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
வழக்கம்போல சனிக்கிழமை இரவும் வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதையடுத்து, அவரது மனைவியும், மகளும் தூங்கச் சென்ற நிலையில், நிஜேஷ் வீட்டின் வெளியே அமா்ந்திருந்துள்ளாா்.
அப்போது, தனது மாமாவான பாலு என்பவருக்கு ‘வாழ பிடிக்கவில்லை. அதனால், தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்’ என கைப்பேசி மூலம் குறுந்தகவல் அனுப்பியுள்ளாா்.
இது குறித்து பாலு, ஸ்டெல்லா மேரிக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா். அவா் படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து பாா்த்தபோது, நிஜேஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
