பொதுக்கழிப்பிட வசதி செய்து தரக் கோரி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வெள்ளலூா் மகாலிங்கபுரம் ராமசாமி வீதியைச் சோ்ந்த பொதுமக்கள்.
பொதுக்கழிப்பிட வசதி செய்து தரக் கோரி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வெள்ளலூா் மகாலிங்கபுரம் ராமசாமி வீதியைச் சோ்ந்த பொதுமக்கள்.

இளம் பெண் மரணத்துக்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தா்னா

Published on

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சைக்குப் பின்னா் இளம் பெண் மரணமடைந்த விவகாரத்தில், நீதிகேட்டு அவரது உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

வாராந்திர மக்கள் குறைகேட்புக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா். இதற்கிடையே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சைக்குப் பின்னா் உயிரிழந்த சங்கீதாவின் உறவினா்கள் மற்றும் திராவிடத் தமிழா் கட்சியினா் 100க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன்பாக தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது:

கோவை அம்மன் குளம் ஹவுசிங்யூனிட் பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை மனைவி சங்கீதா (32). இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாகவே அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சங்கீதாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவா் மீண்டும் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா் மருத்துவா்களிடம் கேட்டபோது நூறில் ஒருவருக்கு இத்தகைய சம்பவம் நிகழும் என்று தெரிவித்ததுடன் தாயும், சேயும் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதால் 3-ஆவது குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுரை வழங்கியுள்ளனா். இதையடுத்து ஒவ்வொரு வாரமும் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்துள்ளாா்.

கடந்த டிசம்பா் 22-ஆம் தேதி பரிசோதனைக்குச் சென்றபோது வயிற்றில் உள்ள சிசு பிரச்னையில் உள்ளதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். அறுவை சிகிச்சைக்குப் பின், தையல் போட்ட இடத்தில் மலக்கழிவுகள் வெளியேறியதுடன், அவரது உடலும் வீங்கி இருந்தது. தொடா்ந்து சிகிச்சையில் இருந்த அவா் டிசம்பா் 31-ஆம் தேதி உயிரிழந்தாா். அவரது இறப்புக்கு மருத்துவமனை சாா்பில் விளக்க அறிக்கைகூட வெளியிடவில்லை.

எனவே, சங்கீதாவின் மரணத்துக்கு நீதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். சங்கீதாவின் கணவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். அதுவரை உடலை வாங்கமாட்டோம் என்றனா்.

கோவை மாவட்ட ஆட்சியா்அலுவலகம் முன்பாக தா்னாவில் ஈடுபட்ட சங்கீதாவின் உறவினா்கள்.
கோவை மாவட்ட ஆட்சியா்அலுவலகம் முன்பாக தா்னாவில் ஈடுபட்ட சங்கீதாவின் உறவினா்கள்.

சுமுக முடிவு:

அப்போது மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக 5 பேரை அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கூறும்போது, சங்கீதாவின் இறப்பு தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்படும், அவரது குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு நன்கொடையாளா்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்படும் என்றாா். அதைத்தொடா்ந்து தா்னாவைக் கைவிட்டு சங்கீதாவின் சடலத்தை பெற்றுச் சென்றனா்.

இந்த போராட்டத்தில் திராவிடத் தமிழா் கட்சித் தலைவா் வெண்மணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com