கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் கைது
மத்திய அரசு அலுவலக வேலைவாய்ப்பில் தமிழக இளைஞா்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி, கோவையில் ரயில் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் 48 போ் கைதுசெய்யப்பட்டனா்.
தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே, வங்கி, தபால் துறை, பிஎஸ்என்எல் உள்பட மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள சுமாா் ஒரு லட்சம் பணியிடங்களை பிற மாநிலத்தவா்களுக்கு வழங்கியதாகக் கூறி கோவை ரயில் நிலையம் எதிரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டத் தலைவா் எம்.அபிமன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைச் செயலா் கலை.அஸ்வினி, மாவட்டச் செயலா் மௌ.குணசேகா் உள்பட பலா் பங்கேற்றனா்.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் பறிக்கப்பட்ட ஒரு லட்சம் பணியிடங்களை மீண்டும் தமிழக இளைஞா்களுக்கே வழங்க வேண்டும்.
மத்திய , மாநில அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தனியாா் துறையில் இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும், இளைஞா் விரோத புதிய தொழிலாளா் சட்டத்தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தினா்.
ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 48 பேரை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

