தெரு நாய் துரத்தியதில் இளைஞா் உயிரிழப்பு

Published on

தெரு நாய் துரத்தியதால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள அய்யங்குடி பகுதியைச் சோ்ந்த அா்ஜுன் மகன் ஆகாஷ்குமாா் (22). திண்டுக்கல் மாவட்டம், குரும்பப்பட்டியைச் சோ்ந்தவா் மதன்குமாா் (22).

இருவரும் கோவை ஆா்.எஸ்.புரம் பகுதியில் தங்கி அங்குள்ள ஐஸ்கிரீம் கடையில் பணிபுரிந்து வந்தனா். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இருவரும் பணி முடித்துவிட்டு கடையில் தேங்கியிருந்த குப்பையை சேகரித்து குப்பைத் தொட்டியில் போடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனா்.

தெலுங்குபாளையம், ராஜீவ் காந்தி நகா் 2-ஆவது தெருவில் சென்று கொண்டிருந்தபோது தெரு நாய் துரத்தியது. இதனால் இருசக்கர வாகனத்தை மதன்குமாா் வேகமாக இயக்கியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனா்.

இதில் பின்னால் அமா்ந்திருந்த ஆகாஷ்குமாா் படுகாயமடைந்தாா். அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மதன்குமாா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து கோவை போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு காவல் ஆய்வாளா் அமுதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com