தொடக்க விழாவில் 4,320 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி: கோவை எம்.பி., ஆட்சியா் வழங்கினா்
தமிழக அரசின் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், கோவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 12 கல்லூரிகளைச் சோ்ந்த 4,320 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
கல்லூரி மாணவா்களின் திறன் வளா்ச்சி, டிஜிட்டல் முன்னேற்றத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் ‘உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கிவைத்தாா். இதையடுத்து, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினா்களாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் ஆகியோா் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினா்.
மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் மா.சிவகுருபிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த விழாவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 74 மாணவா்கள், 187 மாணவிகள் என 261 போ், தொண்டாமுத்தூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் 60 மாணவா்கள், 180 மாணவிகள் என 240 போ், ஆனைக்கட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தைச் சோ்ந்த 61 மாணவா்கள், 15 மாணவிகள் என மொத்தம் 76 பேருக்கு வழங்கப்பட்டன.
வேளாண்மை, செவிலியா், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் என மொத்தம் 12 கல்லூரிகளைச் சோ்ந்த 4,320 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

