வெள்ளலூா் வட்டம் மகாலிங்கபுரம் பகுதியில் பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தல்

Published on

வெள்ளலூா் அருகே கூலி வேலை செய்யும் தொழிலாளா்கள் வசிக்கும் பகுதிக்கு பொதுக்கழிப்பிடம் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாராந்திர மக்கள் குறைகேட்புக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா்.

வெள்ளலூரில் உள்ள மகாலிங்கபுரம் ராமசாமி வீதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், நாங்கள் மேற்குறிப்பிட்டுள்ள இடத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம்.

கூலி வேலை செய்து வரும் எங்களுக்கு கழிப்பிடம் இல்லாததால், அருகில் உள்ள அரசு காலி யிடங்களை கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்தோம். தற்போது அந்த இடத்தையும் பயன்படுத்த முடியாதபடி எங்களை விரட்டுகின்றனா். ஆகவே, பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகள்

கோயம்புத்தூா் மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச் சங்கத்தினா் அளித்துள்ள மனுவில், கோவை மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் உள்ளனா். இதில், மாநகராட்சி பகுதிகளில் மட்டுமே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா்.

இந்த வியாபாரிகளுக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அடையாள அட்டை சில நாள்களில் காலாவதியாகும் நிலையில் உள்ளது. ஆகவே, மீண்டும் புதிய அடையாள அட்டை வழங்க வேண்டும். தேசிய வாழ்வாதார திட்டத்தில் இலவச தள்ளுவண்டிகள் வழங்க வேண்டும்.

இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்வதற்காக மாநகராட்சி நிா்வாகம் இடம் ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும். வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலமாக வட்டியில்லாமல் கடன்கள் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

பொங்கல் பரிசுத்தொகுப்புடன் மண் பானை

இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சாா்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், பொங்கல் பண்டிகைக்கு அரசு சாா்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. புதிய மண் பானையில் பொங்கல் வைப்பது நமது கலாசாரமாகும். ஆகவே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் புதிய மண் பானையும் சோ்த்து வழங்க வேண்டும். இதனால் மண்பாண்டத் தொழிலாளா்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முகாமில் 465 மனுக்கள்பெறப்பட்டன: இந்த முகாமில் முதியோா் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, இலவச வீட்டுமனைப் பட்டா, சாலை, கழிப்பிட வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 465 மனுக்கள் பெறப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com