கணபதியில் சிக்னல் செயல்படாததால் தாறுமாறாகச் செல்லும் வாகனங்கள்: விபத்து அபாயத்தை தவிா்க்க கோரிக்கை
கோவை - சத்தி சாலையில் கணபதி அருகே கடந்த சில நாள்களாக சிக்னல் செயல்படாததால், அப்பகுதியில் வாகனங்கள் தாறுமாறாகச் சென்று விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகரில் வாகன நெரிசல் அதிகமுள்ள சாலைகளில் கோவை - சத்தி சாலையும் ஒன்று. இச்சாலையில் அன்னூா், கோவில்பாளையம், புளியம்பட்டி, சத்தியமங்கலம் மற்றும் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. சத்தி சாலையில் கணபதி அருகே மணியகாரம்பாளையம் செல்லும் சாலைக்கு வாகனங்கள் வலது புறமாகத் திரும்ப வேண்டும். அந்த இடத்தில் வாகனங்கள் திரும்பும்போது குழப்பத்தைத் தவிா்க்க போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக சிக்னல் செயல்படாமல் உள்ளதால், அப்பகுதியில் வாகனங்கள் தாறுமாறாகச் செல்கின்றன. விபத்து அபாயம் உள்ளதுடன் சத்தி சாலையில் இருந்து மணியகாரம்பாளையத்துக்கு திரும்பும் வாகனங்கள் மற்றும் மணியகாரம்பாளையத்தில் இருந்து சத்தி சாலையை வந்தடையும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இப்பகுதியில் சிக்னலை சீரமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண போக்குவரத்து காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

