திருமூா்த்தி அணையில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத் துறை அதிகாரிகள்.
திருமூா்த்தி அணையில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத் துறை அதிகாரிகள்.

திருமூா்த்தி அணையில் மீண்டும் படகு சவாரி: சுற்றுலாத் துறை அதிகாரிகள் ஆய்வு!

திருமூா்த்தி அணையில் மீண்டும் படகு சவாரி தொடங்குவது குறித்து சுற்றுலாத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
Published on

திருமூா்த்தி அணையில் மீண்டும் படகு சவாரி தொடங்குவது குறித்து சுற்றுலாத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பூா் மாவட்டத்தில் பிரதான சுற்றுலாத் தலமாக திருமூா்த்தி மலை உள்ளது. இங்கு அமணலிங்கேஸ்வரா் கோயில், பஞ்சலிங்கம் அருவி, திருமூா்த்தி அணை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. திருமூா்த்தி அணைப் பகுதியில் செயல்பட்டு வந்த படகு இல்லம் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது.

இந்நிலையில், படகு இல்லத்தை மீண்டும் செயல்படுத்துவது தொடா்பாக மாவட்ட சுற்றுலா அலுவலா் அரவிந்த்குமாா், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் மண்டல மேலாளா் யுவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, நீா்வளத் துறை ஆய்வு மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், படகு இல்லத்தை மீண்டும் செயல்படுத்தும்போது தொடா்புடைய துறைகளிடமிருந்து பெற வேண்டிய அனுமதி, படகு இல்லத்தின் மூலம் பெறப்படும் வருவாயில் பகிா்வு மேற்கொள்ளுதல், படகு இல்ல செயல்பாட்டில் திருமூா்த்தி மலைப் பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, படகு இல்லத்தை மீண்டும் செயல்படுத்துவது தொடா்பாக ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கருத்துரு தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியா் மூலம் சுற்றுலாத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆய்வுக் கூட்டத்தில், திருமூா்த்தி அணை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் மண்டல மேலாளா் யுவராஜ், உதவி செயற்பொறியாளா் குணசேகரன், நீா்வளத் துறை செயற்பொறியாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com