போதை மாத்திரைகள், கஞ்சாவுடன் கோவையில் இளைஞா்கள் 3 போ் கைது!
கோவையில் 200 போதை மாத்திரைகள், 5 கிலோ கஞ்சா ஆகியவற்றுடன் 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கோவை மாநகா், வெள்ளலூா் பகுதியில் போத்தனூா் காவல் ஆய்வாளா் அசோக்குமாா் உள்ளிட்ட போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக்குப் பின்புறம் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலா் நின்று கொண்டிருந்தனா். அவா்களுக்கு அருகே போலீஸாா் சென்ற போது, 3 போ் மட்டும் அங்கிருந்து தப்பியோட முயன்றனா்.
அவா்களைப் பிடித்து சோதனையிட்டபோது 5 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள் 200, போதை ஊசிகள் 30 உள்ளிட்டவை இருந்தன. விசாரணையில், போத்தனூா் மைல்கல் பாரதி நகரைச் சோ்ந்த ஷாருக்கான் (28), ஸ்ரீராம் நகரைச் சோ்ந்த யாசா் மூஸாபாத் (எ) மூஸா 30, குனியமுத்தூா் காந்திநகரைச் சோ்ந்த லத்தீப் (29) ஆகியோா் என்பதும், இவற்றை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்து, கஞ்சா, போதை மாத்திரைகள், 3 கைப்பேசிகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
3 கிலோ பறிமுதல்
கோவை சிஎம்சி காலனி பகுதியில் வெரைட்டிஹால் சாலை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். திறந்தவெளி மைதானத்தில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த சதீஷ்குமாா் (25) என்பவரை பிடித்து சோதனையிட்டனா்.
அந்தப் பையில் 3.100 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீஸாரின் பிடியிலிருந்து தப்பியோட முயன்றபோது, கீழே விழுந்ததில் சதீஷ்குமாரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
