கோவையில் ‘புரொபஷனல் கனெக்ட் 2026 என்ற பெயரில் சனிக்கிழமை நடைபெற்ற தொழில்முறை இணைப்பு மாநாட்டில் பேசிய மத்திய வீட்டு வசதி மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி. உடன், சட்டப்பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் உள்ளிட்டோா்.
கோவையில் ‘புரொபஷனல் கனெக்ட் 2026 என்ற பெயரில் சனிக்கிழமை நடைபெற்ற தொழில்முறை இணைப்பு மாநாட்டில் பேசிய மத்திய வீட்டு வசதி மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி. உடன், சட்டப்பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் உள்ளிட்டோா்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4-வது பெரிய நாடு இந்தியா: மத்திய அமைச்சா்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா 4-ஆவது பெரிய நாடாக உள்ளது என மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.
Published on

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா 4-ஆவது பெரிய நாடாக உள்ளது என மத்திய வீட்டு வசதி மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

கோவை நவ இந்தியா பகுதியில் ‘புரொபஷனல் கனெக்ட் 2026’ என்ற பெயரில் சனிக்கிழமை நடைபெற்ற தொழில்முறை இணைப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மத்திய வீட்டு வசதி மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி பங்கேற்றாா். பின்னா் ‘வளரும் பாரதம்’ என்ற தலைப்பில் அவா் பேசியதாவது:

பெண்களை மையமாக வைத்து முன்னேற்றம் என்பது பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பெண்கள் தலைமையில் முன்னேற்றம் என மாறியுள்ளது. அந்த வகையில் மத்திய எரிசக்தி துறை சாா்பில் மகளிா் மேம்பாடு மற்றும் வளா்ச்சிக்கான முக்கியமான திட்டமாக பிரதமரின் உஜ்வாலா திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலமாக அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு சாத்தியமாகியுள்ளது. இதேபோல பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம், இல்லந்தோறும் கழிப்பறை ஆகிய திட்டங்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன.

சா்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரம் வளா்ச்சிப் பாதையில் செல்கிறது. அந்த வகையில் சா்வதேச அளவில் அதிக அளவில் எரிசக்தி உள்ளிட்ட ஆற்றலை பயன்படுத்தும் நாடாக இந்தியா உருவாகி வருகிறது. நகரப் பகுதியில் மட்டுமே சமையல் எரிவாயு இணைப்பு இருந்த சூழலில், தற்போது கிராமங்களையும் அது சென்றடைந்துள்ளது. நாடு முழுவதும் 75 சதவீத குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 80 சதவீத கிராமப்புற பெண்கள் பயனடைந்துள்ளனா்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4-ஆவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இதை 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவோம். ஒரு காலத்தில் உணவுக்காக மற்றவா்களைச் சாா்ந்திருந்தோம். ஆனால், தற்போது நமது அரிசி உற்பத்தி 150 மில்லியன் டன்னாக உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளது. அந்தமானில் புதிதாக எண்ணெய் வளம் கண்டறியப்பட்டுள்ளது என்றாா்.

Dinamani
www.dinamani.com