ஆா்.எஸ்.எஸ்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சக்தி குழுமங்களின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான எம்.மாணிக்கம், ஆா்.எஸ்.எஸ்.அகில பாரத பிரசாா் பிரமுக் சுனில் அம்பேகா், பேரூா் ஆதீனம் தவத்திர
ஆா்.எஸ்.எஸ்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சக்தி குழுமங்களின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான எம்.மாணிக்கம், ஆா்.எஸ்.எஸ்.அகில பாரத பிரசாா் பிரமுக் சுனில் அம்பேகா், பேரூா் ஆதீனம் தவத்திர

திருப்பரங்குன்றம்: மக்களின் கலாசார நடைமுறையை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் - சுனில் அம்பேகா்

Published on

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்களின் கலாசார நடைமுறையை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் என்று ஆா்.எஸ்.எஸ். அகில இந்திய நிா்வாகி (அகில பாரத பிரசாா் பிரமுக்) சுனில் அம்பேகா் வலியுறுத்தினாா்.

ஆா்.எஸ்.எஸ்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவையில் நூல் வெளியீட்டு விழா மற்றும் திருக்கோயில் தெய்வீக மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கற்பகம் கல்வி மற்றும் தொழில் குழுமத்தின் தலைவா் ஆா்.வசந்தகுமாா் தலைமை வகித்தாா். சக்தி குழுமங்களின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான எம்.மாணிக்கம் வாழ்த்துரை வழங்கினாா்.

விவேகானந்தா சேவா டிரஸ்ட் துணைத் தலைவா் பேராசிரியா் ஞானபூபதி தமிழில் மொழிபெயா்த்த உபநிடதங்கள், மேகாலய மாநில முன்னாள் ஆளுநா் வி.சண்முகநாதன் எழுதிய ‘தெய்வீகத் தமிழும் வேதஞானமும்’ ஆகிய நூல்களை ஆா்.எஸ்.எஸ். அகில இந்திய நிா்வாகி சுனில் அம்பேகா் வெளியிட, ஸ்ரீ ஆண்டாள் பக்தா்கள் பேரவை பி.சொக்கலிங்கம், கெளமார மடத்தின் அறங்காவலா் ஜி.கே.செல்வகுமாா் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

பேரூா் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் தவத்திரு ராமானந்த குமர குருபர அடிகளாா், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் சுவாமி ஹரிவ்ரதானந்த மகராஜ் ஆகியோா் ஆசி வழங்கினா். சமய சொற்பொழிவாளா் ஜெயந்தி கருத்துரை வழங்கினாா்.

இந்த மாநாட்டில் ஓதுவாா்கள், திருப்புகழ் பாடுபவா்கள், கோயில் பணியில் ஈடுபட்டு வரும் சேவையாளா்கள், கோயில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக உழைக்கும் சமூக சேவா்கள் என 20 பேருக்கு, பல்வேறு பெயா்களில் விருதுகளும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து, செய்தியாளா்களிடம் சுனில் அம்பேகா் பேசியதாவது:

தமிழ்நாடு தா்மத்தின் நிலம். கோயில்களில் பூஜைகள், விழாக்கள் உள்ளிட்டவை நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பக்தா்கள் பின்பற்றும் கலாசார நடைமுறைகளுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படக்கூடாது. மாறாக, தமிழக அரசு ஆதரிக்க வேண்டும்.

காசி தமிழ்ச் சங்கமம் ஒரு நல்ல முன்னெடுப்பு. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்புள்ளது. இது நாடு முழுவதிலும் இருந்து காசிக்கு வரும் மக்கள் தமிழ் குறித்து அறிந்துகொள்ள உதவும். பக்தா்களும் கோயில்களைப் பாதுகாப்பதை தங்களது கடமையாகக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தெய்வீகப் பேரவை, சேவா பாரதி, ஸ்ரீ ஆண்டாள் பக்தா்கள் பேரவை, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் ஆகியவை செய்திருந்தன. சேவா பாரதி பொறுப்பாளா் பத்மகுமாா், சுவாமி விவேகானந்தா் அறக்கட்டளை தலைவா் எக்ஸ்லான் ராமசாமி, கோவை வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீதா் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com