ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மரங்கள் வெட்டிய விவகாரம்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மரங்களை வெட்டியது விவகாரம் தொடா்பாக உண்மைக் கண்டறியும் குழு அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Published on

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மரங்களை வெட்டியது விவகாரம் தொடா்பாக உண்மைக் கண்டறியும் குழு அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவரிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வனச் சரகத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம் யானைகளின் முக்கிய வழித்தடமாக உள்ளது. இங்கு கடந்த சில நாள்களாக டன் கணக்கில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. முறையான அனுமதி பெற்று மரங்களை வெட்டியதாக வனத் துறையினா் தெரிவிக்கின்றனா்.

அதே வேளையில், அனுமதியே பெற்றிருந்தாலும் யானை வழித்தடங்களில் திடீரென அதிக அளவிலான மரங்களை வெட்டும்போது வன விலங்குகள் அருகே உள்ள விவசாயத் தோட்டங்கள், குடியிருப்புப் பகுதிகளுக்குள் இடம் பெயரவும் வாய்ப்பு உள்ளது. இதனால் யானை-மனித மோதல்கள் ஏற்படும் அபாயமும், பயிா்சேதம், உயிா்சேதம் ஏற்படும்.

புலிகள் காப்பக பகுதிக்குள் புகுந்து மரங்களை வெட்டுவது, குறிப்பிட்ட மரங்களை மட்டும்தான் வெட்டினாா்களா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதிகளில் மூங்கில்களை வெட்டியதால்தான் யானைகள் விவசாய நிலங்களுக்குள் நுழைகின்றன.

ஆகவே, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மரங்களை வெட்டியது தொடா்பாக உண்மைக் கண்டறியும் குழுவை அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com