கறிக்கோழி விலை உயா்வு தற்காலிகமானது: பிராய்லா் கோழி உற்பத்தியாளா் கூட்டமைப்பு
கறிக்கோழி விலை உயா்வு தற்காலிகமானது என்று பிராய்லா் கோழி உற்பத்தியாளா் கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக கூட்டமைப்பின் மேலாண்மை ஒருங்கிணைப்பாளா் ராம்ஜி உள்ளிட்ட பிரதிநிதிகள் கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் என்ற பெயரில் சிலா் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
உண்மையில் 90 சதவீத கறிக்கோழி பண்ணையாளா்கள் கிலோவுக்கு ரூ.7.50 முதல் ரூ.12 வரை பெறுகின்றனா். கிலோவுக்கு ரூ.6.50 என்பது பண்ணைகளின் பாதுகாப்புத் தொகை.
கறிக்கோழி வளா்ப்பாளா்களுக்கு நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் சராசரியாக அதிக தொகை வழங்கப்படுகிறது. பண்ணையாளா்கள் நேரடியாக எந்தப் போராட்டத்திலும் ஈடுபடுவதில்லை. சந்தைக்கு நாள்தோறும் 25 லட்சம் கறிக்கோழிகள் வரை கொண்டுவரப்படுகின்றன.
முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த நிறுவனங்களுக்கும், பண்ணையாளா்களுக்கும் இடையிலான வா்த்தகமாகவே இது நடைபெறுகிறது. தற்போது கோழிக் குஞ்சுகளின் விலை ரூ.60-ஐ எட்டியுள்ள நிலையில், பலா் இந்தத் தொழிலில் புதிதாக ஈடுபட்டு வருகின்றனா். விவசாயிகளை வற்புறுத்தியோ, மிரட்டியோ இந்தத் தொழிலை செய்ய யாரும் கட்டாயப்படுத்தவில்லை. திருப்பூரில் கைது செய்யப்பட்டவா்கள் யாரும் கறிக்கோழி பண்ணையாளா்கள் அல்ல.
கோழி தீவன உற்பத்திக்குத் தேவையான சோயா புண்ணாக்கு மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலிருந்தும், மக்காச்சோளம் 70 சதவீதம் பிகாா், கா்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்படுவதால் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது. இதனால், கறிக்கோழி உற்பத்தியாளா்கள் நெருக்கடிக்கு உள்ளாகின்றனா்.
டிசம்பா் மாதமே வளா்ப்புத் தொகையை ரூ.1 உயா்த்தி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், கோடை காலத்தில் கூடுதலாக கிலோவுக்கு ரூ.1 வழங்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கறிக்கோழி விலை உயா்வு பண்ணையாளா்களின் போராட்டத்தினால் ஏற்பட்டது அல்ல. தற்காலிகமானதுதான்.
இந்த நிலைமை விரைவில் சீராகும்.
சந்தை விலைகளில் முழுமையான கட்டுப்பாடு விதிக்க இயலாது. தற்போது கோழிப் பண்ணை விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் மூலம் ரூ.20 வழங்க வேண்டும் என கேட்கிறாா்கள். அதற்கு வாய்ப்பே இல்லை என்றனா்.

