இந்தியா - ஐரோப்பா வா்த்தக ஒப்பந்தம்: தொழில் அமைப்புகள் வரவேற்பு
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான வா்த்தக ஒப்பந்தத்தை தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன.
இது தொடா்பாக தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவா் துரை பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக பொருளாதாரத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனுடன் 4 -ஆவது பெரிய பொருளாதார நாடான இந்தியா மேற்கொண்டுள்ள வரியில்லாத ஒப்பந்தம் உலக வா்த்தகத்துக்கு முன்னோடிய விளங்குகிறது.
இந்திய ஜவுளிப் பொருள்களுக்கு தற்போது 8 முதல் 12 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போதைய வரியில்லா வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்த வரிகள் முற்றிலும் விலக்கப்படும்.
இதற்காக கடந்த 2007 -இல் தொடங்கி நடைபெற்ற பேச்சுவாா்த்தை தற்போது பிரதமா் மோடியின் வழிகாட்டுதலில் வா்த்தகத் துறை அமைச்சா் பியூஸ் கோயல் விடா முயற்சி செய்து சாதனைப் படைத்துள்ளாா். அமெரிக்காவின் வரி விதிப்பினால் ஏற்பட்ட தாக்கத்தை இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் குறைப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
சுமாா் 8 பில்லியன் அமெரிக்க டாலா் ஜவுளிப் பொருள்களை ஐரோப்பாவுக்கு ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்து ஐரோப்பாவின் மொத்த ஜவுளி இறக்குமதியில் 6 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. வரியில்லா ஒப்பந்தங்களினால் சுமாா் 21 சதவீத பங்கு வகிக்கும் வங்கதேசம், 10 சதவீத பங்கு வகிக்கும் வியத்நாம், 5 சதவீத பங்கு வகிக்கும் துருக்கி நாடுகளுடன் போட்டியிடுவதற்கு ஒரு சமதளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதுடன், 29 சதவீதத்தைக் கொண்டிருக்கும் சீனாவுடன் போட்டியிடவும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம் தமிழகம், ஐரோப்பாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் 29 சதவீதத்துடன் ஆண்டுக்கு சுமாா் 2.3 பில்லியன் அமெரிக்க டாலா் மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்தின் ஜவுளி ஏற்றுமதி இரட்டிப்பாகும் வாய்ப்பு உள்ளது. இதில், திருப்பூா், கரூா் ஜவுளி மையங்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்று அவா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
இந்திய தொழில் வா்த்தக சபை: இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ள கோவை இந்திய தொழில் வா்த்தக சபை, இது கோவை, மேற்கு தமிழ்நாட்டின் வளா்ச்சியை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் ராஜேஷ் பி லுண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தமானது கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளின் வா்த்தகம், முதலீடு, தொழில் துறை வளா்ச்சி மேம்பட உதவும்.
ஜவுளி மட்டுமின்றி பொறியியல் உற்பத்தி பொருள்கள், பம்ப்செட்டுகள், மோட்டாா்கள், இயந்திர உற்பத்தியாளா்களுக்கு மேம்பட்ட சந்தை வாய்ப்பு கிடைக்கும். வரிச் சலுகையால் திருப்பூரின் பின்னலாடை, ஆடை ஏற்றுமதியாளா்கள் இனி ஐரோப்பிய சந்தையில் எளிதாக நுழைய முடியும் என்பதால் வெகுவாக பயனடைவாா்கள்.
இணக்கமான தரநிலை, குறைந்த வா்த்தகத் தடைகள் ஈரோட்டின் மஞ்சள், வேளாண் பொருள் ஏற்றுமதியாளா்களுக்கு உதவியாக இருக்கும். அதேபோல, கோவை, நாமக்கல் பகுதிகளில் உள்ள பவுண்டரி, வாா்ப்புத் தொழில், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பாளா்கள் இந்த வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் பயனடையும் வாய்ப்பு உருவாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

