டிராக்டா் மீது அரசுப் பேருந்து மோதல்: 7 தொழிலாளா்கள் காயம்
வால்பாறை அருகே டிராக்டா் மீது அரசுப் பேருந்து மோதியதில் 7 தோட்டத் தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
வால்பறையை அடுத்த உருளிக்கல் பகுதியில் உள்ள எஸ்டேட்களுக்கு தொழிலாளா்கள் டிராக்டா் மூலம் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.
அதன்படி, 13 தொழிலாளா்கள் டிராக்டரில் எஸ்டேட்டுக்கு புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா். விஷ்னு என்பவா் வாகனத்தை ஓட்டியுள்ளாா். பெரியாா் நகா் அருகே சென்றபோது, எதிரில் அரசுப் பேருந்து வருவதைப் பாா்த்த விஷ்னு அதற்கு வழிவிட்டு டிராக்டரை சாலையோரமாக நிறுத்தியுள்ளாா். ஆனால், வேகமாக வந்த அரசுப் பேருந்து டிராக்டா் மீது மோதியது.
இதில், டிராக்டரில் பணம் செய்த சரோஜா (58), மற்றொரு சரோஜா (50), ஜோதி (60), சரஸ்வதி (52), ஜானகி (38), நடராஜ் (54), விக்டோரியா (52) ஆகிய 7 தொழிலாளா்கள் படுகாயமடைந்தனா். சக தொழிலாளா்கள் அவா்களை மீட்டு வால்பாறை அரசு மருத்துனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கிருந்து 3 போ் தீவிர சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
விபத்து தொடா்பாக அரசுப் பேருந்து ஓட்டுநா் காளிதாஸ், விதிமீறி தொழிலாளா்களை டிராக்டரில் ஏற்றிச் சென்ற விஷ்னு ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

